பன்னாட்டுக் கருதரங்கம்



7.2.2017  அன்று ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தினமணி நாளிதழ், அகில இந்திய வானொலி நிலையம், ஸ்ரீசங்கரா தொலைக்காட்சி ஆகியவை இணைந்து நடத்திய பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் இலக்கியங்களில் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள், சமூக மேம்பாட்டில் தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆகிய இரு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, நூலாகத் தொகுக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக்கழக, தமிழ் மொழித்துறை பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் அவர்களுக்கு “யாப்பியல் வேந்தர்” என்ற விருது வழங்கப்பட்டது. அவரைக் கண்டு பேசி, அளவளாவும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடைய யாப்பியல் பணிக்கும் தமிழ்த் தொண்டுக்கும் நம் மனமார்ந்த பாராட்டுக்கள்.  மேலும், “சமூக மேம்பாட்டில் தகவல் தொடர்பு ஊடகங்கள்” என்ற பொருண்மையில் அமைந்த அமர்வில் அரும்பாக்கம் வைஷ்ணவ கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் திரு ப.முருகன் அவர்களும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையைச் சார்ந்த முனைவர் இரா. ஜெகதீசன் அவர்களும் இருந்தார்கள். அடியேன் அங்கு சமர்ப்பித்த கட்டுரையின் தலைப்பு “சமூக வலைதள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்ததில் தினமணியின் பங்களிப்பு”. இக்கட்டுரையை முழுமையாகப் படிக்க எனது edaimaruthourkmanjula@blogspot.in  என்ற வலைப்பூவிற்கு வாருங்கள்…. தமிழ்மொழியை வளர்க்கக்கூடிய பயனுள்ள கட்டுரையாக இருக்கும் என நம்புகிறேன். இப்படியொரு கட்டுரையை எழுதவைத்த – இத்தகைய தமிழ்ப் பணியை செம்மையாகச் செய்து வரும் தினமணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

 கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை கீழ்வருமாறு.... 
(தவறு ஏதேனும் இருப்பின் திருத்தி வாசித்துக் கொள்ளவும்... கூடவே மன்னிக்கவும்)



சமூக வலைதள ஆங்கிலச் சொற்களைத்
தமிழாக்கம் செய்ததில் “தினமணி”யின் பங்களிப்பு!
-இடைமருதூர் கி.மஞ்சுளா,
பி.லிட்., எம்.ஏ., எம்ஃபில்.,
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை.
முன்னுரை:
     சமூக மேம்பாட்டுக்கு உதவும் வகையில் உருவாகியிருக்கும்  தகவல் தொடர்பு நிறுவனங்களாக,  சமூக வலை தளங்கள் பலவும் இயங்கி வருகின்றன. அவற்றுள், ஃபேஸ்புக் (Facebook),  டுவிட்டர் (Twitter),  யூ டியூப் (You tube), வாட்ஸ்அப் (Whatsapp), வலைப் பூ  (Blogger), ப்ளிக்கர்  (Flickr), லிங்ட்இன் (linkedin), கூகுள் பிளஸ் (Google +), விக்கிபீடியா (wikipedia) முதலியவை இயங்கி வருகின்றன. இன்னும்  பல புதிது புதிதாய் உருவாகி வருகின்றன. இவற்றுள் இன்று பேஸ்புக் (முகநூல்/ Facebook),  டுவிட்டர் (Twitter)  கணக்கு இல்லாதவர்களே இல்லை என்று கூறலாம். இத்தகைய சமூக வலை தளங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்கள் சமீப காலமாக அதனதன் ஆங்கிலப் பெயரிலேயே வழங்கிவந்தன. ஆனால், தினமணி நாளிதழ் - தமிழ்மணி பகுதியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக (149 வாரங்கள்) வெளிவந்த சொல் வேட்டை, சொல் புதிது, சொல் தேடல் ஆகிய மூன்று தொடர்களின் மூலம் பல சமூக வலை தள, கணினிச் சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. அந்த வகையில் தினமணி, தமிழ்மணியில் வெளியான தமிழ்ச் சொற்களையும்,  தற்போது சமூக வலை தளங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கிவரும் “கட்செவி அஞ்சல்” (வாட்ஸ்அப்) பற்றிய விரிவான விளக்கத்தையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

  பழைமையும் புதுமையும்:

     “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
      பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!”1

என்று பன்னெடுங் காலத்திற்கு முன்பே மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.  அஃதாவது, “கால தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு முற்பட்ட பழம்பொருளாய் இருப்பவனே, பிற்பட்ட புதுமையான பொருள்கள் எல்லாவற்றுக்கும் மீண்டும் அதே பொருள்தன்மை உள்ளவனே” என்று இறைவனே உலகில் தோன்றிய பழையன புதியன இரண்டிற்கும் காரணன் என்கிறார். முன்னைப் பழம் பொருள்களான கடிதம்,  வானொலி, தந்தி, தொலைபேசி முதலிய தகவல் தொடர்பு சாதனங்களுள் சில இன்றைக்குப் புறம் தள்ளப்பட்டுவிட்டன. நாளிதழ்கள் மட்டும் இன்றைக்கும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தம் பங்களிப்பைச் செய்து வருகின்றன. அந்த நாளிதழ்களையும் இன்றைக்கு செல்லிடப் பேசியில் வாசிக்கும் நிலை உருவாகிவிட்டது அறிவியலின் அதிதீவிர வளர்ச்சி எனலாம்.  இன்றைய சமூகப் பங்களிப்புக்குப் புதியனவான வந்துள்ள  செல்லிடப்பேசி, கணினி, தொலைக்காட்சி, முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை முதலியவை மணிவாசகர் குறித்துள்ளது போல புதுமைக்குப் பெற்றியாய்த் திகழ்கின்றன. மேற்குறித்த தமிழ்ச் சொற்களை முதன்முதலில் வழங்கியது தினமணியே! மேலும், பவணந்தியார், நன்னூல் என்ற இலக்கண நூலில்,
           “பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”2

என்கிறார். அதாவது முற்காலத்திலுள்ள இலக்கணங்களுக்குள் சில பிற்காலத்தில் இறத்தலும் (அழிதலும்), முற்காலத்து இல்லன சில பிற்காலத்தில் இலக்கணமாதலும் (புதியன தோன்றுதலும்) வழுவல்ல (தவறல்ல) என்கிறார். இந்நூற்பா சமூக மேம்பாட்டுக்கு முன்பு உதவி வந்த தகவல் தொழில்நுட்பப் பொருள்களுக்கும், தற்போது உதவிவரும் தகவல் தொழில்நுட்பப் பொருள்களுக்கும் பொருந்தி வருகின்றன.
உலக மக்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து வைக்கும் சமூக ஊடகங்கள் (Social Media) இன்று ஒவ்வொருவருடைய  வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய சமூக வலை தளங்களை நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றோம் என்று சிந்திக்கும் போது பல்வேறு ஆக்கப்பணிகள்  இதனால் நடந்திருந்தும்,  சில தீய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன – நடந்து வருகின்றன. உலகில் தோன்றிய – தோற்றுவிக்கப்பட்ட எல்லாப் படைப்புகளிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் என்பதே இயற்கை.

தினமணியில் மூவரின் பங்களிப்பு:
இணையத்தில் உலாவரும் சில சமூக வலை தளங்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களையும், இணையதளம் தொடர்பான சொற்களையும் தமிழ்ப்படுத்தித் தந்ததில் மூவர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வாரம்தோறும் தினமணியில் வெளியாகும் இலக்கியப் பகுதியான தமிழ் மணியில், நீதியரசர் வெ. இராசுப்பிரமணியன் தொடர்ந்து 49 வாரங்கள் ஆடிய சொல் வேட்டை, முனைவர் மா. இராசேந்திரன் 50 வாரங்கள் தொடர்ந்து தந்த சொல் புதிது, முனைவர் தெ.ஞானசுந்தரம் 50 வாரங்கள் தொடர்ந்து தேடிய சொல் தேடல் ஆகிய மூன்று தொடர்களும் சங்கத்தமிழ், தற்காலத்தமிழ், கணினித்தமிழ், இணையதமிழ், அறிவியல் தமிழ் முதலியவற்றிற்கு ஏற்றம் தந்தன. இணையத்தில் பயன்படுத்தப்படும் பல புதிய புதிய ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்து, அதை உலகறியச் செய்த பெருமை தினமணி ஆசிரியருக்கும், தினமணி நாளிதழுக்குமே சேரும். அச்சொற்களைத் (தமிழ்ச் சொற்களை) தற்போது பலரும் பேச்சு வழக்கிலும், கட்டுரையிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தமிழாக்கச் சொற்களை தினமணியே முதன் முறையாகத் தந்தது.

தினமணி – தமிழ்மணியின் பங்களிப்பு:
தினமணி தமிழ்மணியில் 149 வாரங்கள் நடத்தப்பட்ட சொல் வேட்டை, சொல்புதிது, சொல்தேடல் ஆகிய மூன்று தொடர்களின் மூலம் பல இணையதள – சமூக வலைதளச் சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. அச்சொற்களுள் சில வருமாறு: நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் ஆடிய சொல் வேட்டையில், அடிக்ட் (மீளா வேட்கை), இன்புட்-அவுட்புட் (உள்ளீடு வெளியீடு), காலக்சி (விண்ணொளித்திரள்), புளூடூத் (இழைதவிர் இணைப்பு), டிஜிட்டல் (எண்ணுருக்கூறு), பென் டிரைவ் (தரவகக் கோல்), டுவீட் (நறுங்கொலி)3 ஆகிய சொற்களுக்கான தமிழாக்கம் வெளிவந்தன.

முனைவர் ம.இராசேந்திரன் தேடிய சொல் புதிது தொடரில், ஸ்சோர்ஸ் (ஆதார வாயில்கள்), ட்விட்டர் (சுட்டுரை), சாட் (சொல்லாடல்), சைபர் க்ரைம் (மின்னூடகக் குற்றம்), செல்ஃபி (கைப்படம்), ஸ்பேம் (பதடி), ஸ்பேம் மெயில் (பதடி அஞ்சல்), வாய்ஸ் மெயில் (பேச்சுக்குரல் அஞ்சல்), வாட்ஸ்அப் (கட்செவி அஞ்சல்), டிக் (அறிகுறி), ஸ்வீப் (அலைப்பெருக்கு), இ-புக்-ரீடர் (மின் நூல் தூக்கி), ஸ்மாட் ஃபோன் (அறிதிறன் பேசி), பேக்அப் (வைப்புநகல்), ஆக்ஸஸ் (பெறுவாயில்), வொய்-ஃபை (கைமெய்), ஹேங் (தொங்கல்), ஹாட்-ஸ்பாட் (இணைய பற்றுக்கோடு)4 ஆகிய தகவல் தொடர்பு குறித்த ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டன.

இறுதியாக முனைவர் தெ.ஞானசுந்தரம் தேடிய சொல் தேடலில், ரிமோட் (கைப்பொறி அல்லது சேணி), பஸ்ஸர் (முரலி அல்லது முரலொலி), ஐகான் (சுட்டுரு அல்லது திருவுரு)5 ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் தரப்பட்டன. இம்மூன்று தொடர்களிலும் தமிழ்ச் சொற்களைத் தேடி, சரியான சொற்களை உருவாக்க மேற்குறித்த மூவருக்கும் உதவியவர்கள், இருபதுக்கும் மேற்பட்ட தினமணி வாசகர்கள் ஆவர். அவர்களுடைய பங்களிப்பும் இதில் அளப்பரியதாகும். இம்மூன்று தொடர்களுள் நீதியரசர் வெ. இராசுப்பிமணியத்தின் தொடர், நர்மதா பதிப்பகத்தாரால் “சொல் வேட்டை” என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமையில் கோவை, சென்னை முதலிய ஊர்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கட்செவி அஞ்சல்:
சமூக மேம்பாட்டுக்கு உதவும் வலைதளங்களில் ஒரு புரட்சியை உருவாக்கிய முகநூலையும் சில ஆண்டுகளாகப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்து வருகிறது கட்செவி அஞ்சல் எனப்படும் வாட்ஸ்அப். வாட்ஸ்அப் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழாக்கத்தை முதன் முறையாகத் தந்தது தினமணியின் தமிழ்மணிதான். முனைவர் ம.இராசேந்திரன் இச்சொல்லை தமிழாக்கம் செய்து தந்த பிறகுதான் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் “கட்செவி அஞ்சல்” என்பது பிரபலமானது. மேலும் தினமணியின் ஆசிரியர் இச்சொல்லை தன் தலையங்கப் பக்கத்திலும், தமிழ்மணியின், இந்தவாரம் – கலாரசிகன் பகுதியிலும் தேவை ஏற்படும் போதெல்லாம் (ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து) பயன்படுத்தி மக்களுக்கு வாட்அப்பின் தமிழ்ப் பெயரான கட்செவி அஞ்சலை மேலும் பிரபலப்படுத்தினார். இச்சொல் மட்டுமன்று, கைமெய் (வொய்-ஃபை), சுட்டுரை(ட்விட்டர்), முகநூல்(ஃபேஸ்புக்) முதலிய தமிழ்மணியில் வெளியான பல சொற்களையும் பயன்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“கட்செவி” யின் விளக்கம்:
இன்றைய காலகட்டத்தில் கட்செவியை (வாட்ஸ்அப்) பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். கட்செவி அஞ்சல் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் இன்று முன்னணி வகிக்கிறது சிறுகதைகள், புராணக் கதைகள், கோயில்கள் பற்றிய தலவரலாறுகள், நகைச்சுவைத் துணுக்குகள், அரசியல் செய்திகள், குடும்ப நிகழ்வுகள், ஒளி, ஒலிக் காட்சிகள், விழிப்புணர்வு தகவல்கள், மருத்துவக் குறிப்புகள், கட்டுரைகள், ஆபத்துக் காலத்தில் அணுக வேண்டிய தொலைபேசி எண்கள் முதலியவை நம் கையிலுள்ள செல்லிடப்பேசி – கட்செவி அஞ்சலில் வந்து குவிகின்றன. அதுமட்டுமல்ல, தற்போது பத்திரிகை, தொலைகாட்சி முதலியவற்றில் பணி்யில் இருக்கும் நிருபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிருபர் ஒரு நிகழ்ச்சியில் தாம் எடுக்கும் புகைப்படத்தை இருந்த இடத்திலிருந்தே உடனுக்குடன் ஒருவருக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அனுப்பி, செய்தி வெளியிட உதவும் அளவுக்கு மிகமிக துரிதமாகச் செயல்படுகிறது கட்செவி அஞ்சல்.
இதனால் உடனுக்குடன் செய்திகளையும், விளம்பரங்களையும், காட்சிகளையும், ஒருவருடைய குரலையும் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இதைக் குழுவாகவும் பயன்படுத்த முடிகிறது. ஒரு குழுவை யார் உருவாக்குகிறார்களோ அவர்களே இதன் நிர்வாகி(அட்மின்)யாகிறார். இத்தகைய சமூக நலன் பயக்கும் கட்செவி உருவானது குறித்து அறிவது அவசியமாகிறது. தமிழ் மணியில் வெளியான கட்செவி குறித்த முனைவர் ம.இராசேந்திரனின் விளக்கம் பின்வருமாறு:
 காண்பதும் பொய்; கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றும் சொல்கிறார்கள். விசாரிக்கும் போது கண்ணும் காதும் சேர்ந்து கொள்கின்றன. நேரில் பார்ப்பதுதான் காண்பது என்பது மாறி, யாரோ பார்த்ததை நாம் பார்க்க ஊடகம் தருவதும் காண்பது என்பதாகிவிட்டது. கேட்பதும் அப்படியே. ஆனால், கண்ணும் காதும் வைத்தது போல் சொல்லி நம்ப வைப்பதும் நடக்கிறது. நம்புவதற்குக் கண்ணும் காதும் சேர வேண்டி இருக்கின்றன.
எழுத்து, கண் வழி அறிவது; தொலைபேசி அல்லது செல்பேசி காதால் அறிவது. கண்ணும் காதும் சேர்ந்து அறியும்படியாகத் தனிப்பட்டவர் தகவல் அனுப்ப இப்போது முடிகிறது. அஞ்சலில் செல்லும் கடிதத்திலும் மின் அஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் கண் வழி அறியும் எழுத்து மட்டுமே பயன்பட்டு வருகிறது. பேச்சுக்குரல் அஞ்சலில் காதுவழி அறியும் குரல் மட்டுமே பயன்பட்டு வருகிறது. கண்ணும் காதும் தனித் தனியாகவும் சேர்ந்தும் அறியும் அஞ்சலை இப்போது அனுப்ப முடிகிறது. செய்தியோடு படத்தையோ, காணொலிக் காட்சிப் பதிவையோ, வெறும் பேச்சுக் குரலையோ அனுப்ப முடிகிறது. இப்படி ஒருவருக்கு ஒருவரோ ஒரு குழுவிற்குள்ளோ அனுப்பவும் பகிரவும் கலந்துரையாடவும் W‌h​a‌t‌s​A​PP பயன்படுகிறது. இணையதள வசதியுடன் கூடிய செல் பேசிகளில் இந்த வசதி கிடைத்துள்ளது. மின் அஞ்சல் போல திறக்க வேண்டாம்; கடவுச்சொல் வேண்டாம், செல்பேசி எண் போதும். நமது செல்பேசியில் இருக்கும் எண்களில் யார் யார் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள்  என்று அதுவே கண்டறிந்து சொல்கிறது.
தகவல் நம் செல்பேசியிலிருந்து போய்விட்டதா அல்லது முடங்கிக் கிடக்கிறதா என்றும், அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதா என்றும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் வாட்ஸ்ஆப் சொல்கிறது. அவர்கள் வாட்ஸ்ஆப் பார்த்தார்களா என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இப்போது இருக்கிறது. 2009-இல் இந்த வசதி முதன்முதலில் அறிமுகமாகியுள்ளது. 2009 நவம்பர் முதல் ஆப்பிள் செல்பேசியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அக்டோபர் 2014 நிலவரப்படி உலகில் 60 கோடிபேர் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும் 7 கோடி பேர் இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்களாம். மாதம்தோறும் 2 கோடி பேருக்குமேல் புதிதாக இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்களாம். அப்படியென்றால், நாளொன்றுக்கு 8 இலட்சம் பேர் புதிதாக இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்!

படிக்கவும் கேட்கவும் கிடைத்துவந்த மின் அஞ்சல் குறுஞ்செய்தி வசதிகளைப் படம் பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான வசதிகளோடு வாட்ஸ்ஆப் வழங்கி வருகிறது. கண்ணால் படிக்கவும் பார்க்கவும் காதால் கேட்கவுமான வசதிகளைத் தருகிறது வாட்ஸ்ஆப். படித்து அறிந்து கொண்டிருக்கும் செய்தியும் தகவலும் பார்க்கவும் படிக்கவும் பேசவும் கேட்கவுமாகக் கிடைக்கத்  தொடங்கியுள்ளன. அதனால் கண்ணும் செவியும் சேர்ந்து அறியும்படி அனுப்பப்படும் அஞ்சலாக இருப்பதால்கட்செவி அஞ்சல்” என்று சொல்லலாம். "கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்'' என்று பாரதியார் பாடுகிறார்.

"சுருண்டு, படம் சுருக்கி, உறங்கிக் கிடந்த நேரம் போக, மீதி நேரங்களில் பாம்பு ஆய்வுத்தொகைகளை அலசிப்பார்த்தது. திறனாய்வாளர் பேராசிரியர், கலாநிதி, குமரேச குத்தாலலிங்கம் கோபக்குரலில் எழுப்பும் வினா கட்செவியில் உறைத்தது'' என்று நாஞ்சில்நாடன் எழுதுகிறார்.  "கட்செவி' என்றால் பாம்பு; கண்ணே செவியாக உடையது. கண்ணுக்கும் செவிக்குமாக அஞ்சல் அனுப்புவதால் வாட்ஸ்ஆப், கட்செவி அஞ்சலாகிறது. பாம்பு என்றால், படமும் நினைவுக்கு வரும்; கட்செவி அஞ்சலில் படமும் அனுப்ப முடியும்தானே!”6 என்று கூறும் அவர், சொல் புதிதில் இடம்பெற்ற வாட்ஸ்அப் என்பதற்கான தமிழாக்கத்தை “கட்செவி அஞ்சல்” என்று மகாகவி பாரதியார் பாடலைத் துணைக்கழைத்து, இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறார்.

சமூக வலை தளத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்நாட்டிலிருந்து வெளிவரும் "பிஎன்ஏஎஸ்' ஆய்வு இதழில் வெளியான செய்தியை தினமணி நாளிதழ் செய்திக் குறிப்பு7 ஒன்று தெரிவிக்கிறது.

சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்:
இன்றைக்கு அறிவியல் முன்னேற்றத்தில் உலகம் அதிவிரைவாக வளர்ந்து வருகிறது.  கணினி, செல்லிடப்பேசி, மின்னஞ்சல், முகநூல், சுட்டுரை, வலைப்பூ முதலியவற்றின் பயன்பாடுகள் மிக இன்றியமையாததாகிவிட்டன. இன்று கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாகப் போய்விட்டது. இணையமும் சமூக வலை தளங்களும் ஒரு நாணயதத்தின்  இரு பக்கங்கள் போல நன்மையும் தீமையும் இணைந்தே உள்ளன.

உலகளாவிய அளவில், உலகத் தகவல் அனைத்தையும் பல்வேறு வலைதளங்கள்  நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே கொண்டுவந்து கொட்டுகின்றன. இதனால், உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலை தளங்கள் இயங்கி வருகின்றன.  இத்தகைய சமூக வலை தளங்களினால் பல நன்மைகள் இருப்பினும், பல தீமைகளும் (குற்றங்களும்) நடந்து (பெருகி) வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
 “தீதும் நன்றும் பிறர்தர வாரா”7 என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்குப்படி ஒரு பொருளை எதற்காக - எந்த விதத்தில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே நன்மையும் தீமையும் அமைகின்றன. இதில் தனிமனித சுயக்கட்டுப்பாடும் அவசியமாகிறது.  மாணிக்கவாசகர், “தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்”8 என்கிறார். நன்மைக்கும் தீமைக்கும் பிறரைக் காரணம் காட்டக்கூடாது என்கிறார். திருமூலரோ, “தானே தனக்கு பகைவனும் நட்டானும்”9 என்கிறார். ஆகவே, நம்மையும் தீமையும், நட்பும், பகையும் அவரவரின் சுயக்கட்டுப்பாட்டைப் பொருத்தே அமைகின்றன.

நன்மைகள்:
சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கின்றன. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. உறவுகளுக்குப் பாலம் அமைத்துக் கொடுக்கின்றன.
நட்பு வட்டத்தையும் பெருக்கிக் கொள்ள உதவுகின்றன. வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் பொருள்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்கின்றன. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.


தீமைகள்:
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பார்க்க சகிக்காத புகைப் படங்களையும், காணொளி காட்சிகளையும் (வீடியோ) வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனத்தில் சலனம் ஏற்பட அதிகம்  வாய்ப்புகள் உள்ளன. மேலும்,  இணையத் தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

அதிகப் பயன்பாட்டின் விளைவு:
பெருமளவில் மக்கள் செல்லிடப்பேசியிலேயே (செல்ஃபோன்) சமுக வலை தளங்களைப் பயன்படுத்துகின்றனர். செல்லிடப்பேசியில் 24 மணி நேரமும் சமுக வலைதளங்களையே  பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது. அளவோடு பயன்படுத்துவது உடலுக்கும் மூளைக்கும் நன்மை தரும்.
 ”உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள், இளைஞர்களும்தாம். சமுக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது”10 என தி இந்து நாளிதழ் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
சமுக வலை தளங்களில் பரவும் வதந்திகளளையும் தவறான தகவல்களையும் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து, நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடுகிறதாம். சமீபத்தில் இது சமுக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இது மிக விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரியவருகிறது.


முடிவுரை:
இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழாக்கத்தை முதன்முறையாகத் தந்தது தினமணி (தமிழ்மணி) நாளிதழில் இடம்பெற்ற தொடர்கள். அவ்வகையில் பத்திரிகை உலகில் தினமணியின் பங்களிப்பு அளப்பரியது. அத் தமிழ்ச் சொற்களை இன்றைக்குப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சமுக வலை தளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை நன்கறிந்து, அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் குற்றங்கள்  குறையும். குறிப்பாகப் பெண்கள் சற்று விழிப்புணர்வோடு இவற்றைப் பயன்படுத்துவது அவர்களுக்கு நன்மை நல்கும்.

அடிக்குறிப்புகள்
1.   திருவாசகம், 7: திருவெம்பாவை, பா.9.
2.   பவணந்தி முனிவர், நன்னூல்.
3.   தினமணி, தமிழ்மணி, நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், 28.10.2012 முதல் 04.11.2013 வரை.
4.   மேலது, முனைவர் ம.இராசேந்திரன், 23.3.2014 முதல் 8.3.2015 வரை
5.   மேலது, முனைவர் தெ.ஞானசுந்தரம், 22.3.2015 முதல் 29.3.2015 வரை.
6.   மேலது, முனைவர் ம.இராசேந்திரன், ப.6.
7.   கணியன்பூங்குன்றனார், புறநானூறு, பா.192.
8.   மாணிக்கவாசகர், திருவாசகம், 45: யாத்திரைப்பத்து, பா.3.
9.   திருமூலர், திருமந்திரம், பா.2228.
10. Tamil.The.hindu.com (27.10.2014).



Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!