ஸ்ரீகாஞ்சி காமாட்சி - அறம் வளர்த்த நாயகி




இன்று மூன்று சிறப்பு. ஒன்று தைப்பூசம். வடலூரிலும், இடைமருதூரிலும் தைப்பூசம் மிகவும் சிறப்பு. அடுத்து இன்று காஞ்சி காமாட்சி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா. இரண்டு நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் சென்றும் என் அன்னை காமாட்சியை தரிசிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் அவள், அவளைப் பற்றி என்னை 2010-இல் எழுதவைத்த “அறம் வளர்த்த நாயகி” நூலை எடுத்து மனம் மகிழப் பார்த்தேன்.
இந்த நூலின் சிறப்பு ஒரு புறம் இருக்க, இந்நூலை காஞ்சி ஸ்ரீகாமாட்சி பொற்பாதங்களில் வைப்பதற்கு முன்,  ஸ்ரீசங்கர மடத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொற்கரங்களில் தந்து வெளியிட்டு வாழ்த்தியது – அடியேன் மகிழ்ந்தது. இதெல்லாம் தெய்வ சங்கற்பம் அல்லாது வேறொன்றுமில்லை.
இந்நூலின் மேலும் ஒரு சிறப்பு காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலிருந்து வந்திருந்த அருளுரை இடம்பெற்றிருப்பது. இன்னொரு சிறப்பு முன்பு தினமணி வெள்ளிமணி, தமிழன் எக்ஸ்பிரஸ், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராக (ஆசிரியராக) இருந்த பத்திரிகையாளர் சிவஞானச் செல்வர், ஆன்மிக சொற்பொழிவாளர் திரு ஆர்.சிவக்குமார் அவர்கள் கொடுத்திருந்த அணிந்துரை. அவரின் இழப்பு ஆன்மிக உலகிற்குப் பெரும் இழப்பு.
மேலும் ஒரு சிறப்பு இந்நூலின் முன்னுரையில் பெண்ணின் உயர்வு –பெருமை பற்றியும்,  வடமொழிக் கவிஞர் ரஹீம் மற்றும் துளசிதாசர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி குறித்தும் பதிவு செய்திருந்தது. 
இந்நூலில் அறம் வளர்த்த நாயகியின் சிறப்பு, காமகோடி என்றால் என்ன, காஞ்சி மாநகரில் நிகழ்ந்த அற்புதங்கள்,  காமக்கோட்டத்துக் கரும்பு, தழுவக் குழைந்தவர், ஆணின் லட்சியம், தான தர்மங்கள் செய்யும் முறைகள், பெண்ணின் பெருமை, இலக்கியத்தில் அறம், இல்லறம், விருந்தோம்பல், அன்னை காமாட்சி வளர்த்த 32 அறங்கள் பற்றிய விளக்கமும் அதன் ஓவியங்களும்… என் அன்னை காமாட்சி இந்நூலை என்னை எழுத வைத்து அழகுபார்த்த அழகே அழகு. இன்று ஒரு தொலைகாட்சியில் காஞ்சி காமாட்சி ஆலயத்தின் குடமுழுக்கு விழாவைக் கண்டது நான் பெற்ற பெறும் பேறு…. 
இந்நூலை அழகு பதிப்பகம் வெளியிட்டுள்ளது - 044-26502086.
நீங்களும் அன்றாடம் ஏதேனும் ஓர் அறம் செய்யுங்கள். காரணம் அன்னை காமாட்சியே, இந்தந்த அறங்களை மக்கள் செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்பூவுலகில் வந்து அவதரித்து, இந்தகைய அறங்களைச் செய்து காட்டியுள்ளார். இந்நூல் வெளிவந்த பிறகு இதிலுள்ள 32 அறங்களைச் செய்யமுடியாவிட்டாலும் நான்கைந்து அறங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். 
அவை: சைவ நூல்களை அருளிச் செய்தல், அன்னதானம், ஔஷத தானம் (மருந்துதானம்), சிவனடியாரை ஆதரித்தல், விளக்கேற்றி வைத்தல், வெற்றிலைப் பாக்கு தருதல், குருடர்களுக்கு உதவுதல், பசுவுக்கு உணவளித்தல், யாசிப்பவர்க்கு உதவுதல், சிவபூஜைக்குரிய பொருள்கள் வழங்குதல், உருத்திராக்கம் அளித்தல், தீராக்கடன் தீர்த்தல் போன்றவை. மீதமுள்ள அறங்களையும் செய்ய அன்னை அருள் புரிய வேண்டும்.
நாம் பிறந்தது எந்த வழியாக இருந்தாலும், நாம் போகும் பாதை – வழி - நெறி மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும். அதற்கு அன்னை காமாட்சி அருள்புரிவாளாக.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர் மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் – இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…..
(மகாகவி பாரதியார்)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!