நண்பர் செங்கோட்டை ஸ்ரீீராமின் பதிவு பழையது.. ஆனால் என்றும் புதியது

january 11, 2015 (senkottai sriram facebook) தினமணி/எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் என்னுடன் பணியில் இருந்த பெண்கள் பலரும் என்னுடன் சகோதர பாசத்துடனேயே பழகினார்கள். எனக்கு ரத்த சம்பந்தமுள்ள இளைய சகோதரிகள் இருவர் என்றாலும், உடன்பிறவா சகோதரிகள் பலர். குறிப்பாக வயதில் மூத்த பெண்கள், உடன்பிறப்பைப் போலவே பாசம் காட்டினார்கள். அவர்களில் தமிழ்மணியைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இடைமருதூர் மஞ்சுளாவும் ஒருவர். எனக்கான பெண் தேடும் படலத்தில் அவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புத்தகங்கள் சில எழுதியிருக்கிறார்... இன்று அவர் குறித்து தினமணி ஆசிரியர் - தமிழ்மணியில் எழுதியுள்ள பாராட்டுச் சான்றிதழ் இது! வாழ்க! வளர்க!! அவரது பணியும் தொண்டும்! *** //"தினமணி' முதுநிலை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய "ஆத்மதாகம்' என்கிற குறுநாவலுக்கு திருப்பூர் அரிமா சங்கம் 2014க்கான "சக்தி' விருது வழங்கியிருக்கிறது. விருது கிடைத்ததையாவது பதிவு செய்யாமல் இருந்தால் எப்படி? "தமிழ்மணி' பகுதியின் தயாரிப்பில் முதுநிலை உதவி ஆசியராகப் பணியாற்றும் அவருக்கு நீண்ட நாள்களாகவே தன்னைப்பற்றி "இந்த வாரம்' பகுதியில் எந்தவிதமான பதிவும் செய்யப்படவில்லை என்கிற மனவருத்தம் இருந்து வருகிறது. "ஆசிரியர் குழுவில் உள்ள பலரைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிடும் நீங்கள் என்னைப் பற்றி மட்டும் பதிவு செய்யாமல் விடுவது எதனால்? புறக்கணிக்கப்படுவது, நான் பெண் என்பதாலா?' என்கிற அவரது கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இடைமருதூர் கி.மஞ்சுளாவின் உழைப்பையும், "தமிழ்மணி' மட்டுமே தனது சிந்தனையாகச் செயல்படும் அர்ப்பணிப்பையும் எத்துணை பாராட்டினாலும் தகும். சைவ சித்தாந்தத்திலும், செவ்விலக்கியத்திலும் தேர்ச்சி பெற்ற இடைமருதூர் கி.மஞ்சுளாவின் தணியாத எழுத்து தாகத்தை, அவரை விமர்சிப்பவர்கள்கூட ஏற்றுக்கொண்டாக வேண்டும். துறுதுறுவென்று எதையாவது எழுத வேண்டும், பதிவு செய்ய வேண்டும் என்கிற அவரது ஆர்வத்தைப் பார்த்து நானே பலமுறை வியந்ததுண்டு. இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இடைமருதூர் கி.மஞ்சுளாவின் படைப்புகளில் ஒன்று "இலக்கியச் சொற்கோயில்'. நமது தமிழ்மணியில் வெளியான அவருடைய இலக்கியக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், பல்வேறு மலர்களில் வெளியான கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். மணிவாசகப்பிரியா, சிவமானசா, பரிபூர்ணா, பிஞ்ஞகன், கந்தழி, வேம்பு மகள் என்று பல்வேறு புனைபெயர்களில் எழுதித் தள்ளும் இடைமருதூர் கி.மஞ்சுளாவிற்கு இருக்கும் செவ்விலக்கியம் பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் தொகுப்பு "இலக்கியச் சொற்கோயில்'. தமிழ்மணியில் வெளியாவதற்கு முன்னாலும், வெளியான பிறகும் படித்த கட்டுரைகள்தான் அந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பலதும். புத்தகமாகப் படிக்கும்போதுதாம் அந்தக் கட்டுரைகளுக்குப் பின்னால் இருக்கும் இடைமருதூர் கி.மஞ்சுளாவின் இலக்கியம் பற்றிய ஆழங்காற்பட்ட புரிதல் தெரிகிறது! - // http://goo.gl/BXv2Sf

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!