ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு

ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு!

First Published : 09 April 2015 01:43 AM IST
நம் முன்னோர் மொழிந்த "ஒன்றைப் பிடுங்கினால் ஒன்பதை நடு' என்கிற வாசகத்தை நாமெல்லாம் மறந்துவிட்ட காரணத்தால்தான் உலகம் இன்றைக்கு வெப்ப மிகுதியால் தாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
காரணம், ஒன்பதைப் பிடுங்கினோம்; அதற்கு மேலும் பிடுங்கிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், ஒன்றைக்கூட நம்மால் நட முடியவில்லை. அதை நடுவதற்கு இன்றைக்கு நமக்கு இடமுமில்லை; எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகிக் கொண்டிருப்பதனால்...
உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை மட்டும் குறிப்பிடலாம்.
முதல் காரணம், காடுகளில் உள்ள மரங்களை அழித்து, மழை பொழிய விடாமல் தடுப்பது; இரண்டாவது, சாலை, தொழிற்சாலை, கட்டடங்கள் போன்றவற்றைப் புதிது புதிதாக அமைக்கிறோம், குடியிருப்புகளை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் நாட்டில் உள்ள மரங்களையும் வயல்களையும் அழித்து வருவது.
சங்க காலம் தொட்டு இன்றுவரை மரங்களை தெய்வமாக வழிபடும் மரபு தமிழருடையது. வேம்பு, அரசு, ஆல் எனப் பலவகை மரங்களை, அவை தரும் பலன்களைக் கருத்தில் கொண்டு பூஜித்து, வழிபட்டு வருகின்ற மரபு நம்முடையது.
சில தெய்வீக மரங்கள்தான் இத்தமிழ் மண்ணுக்குப் பல மகான்களை - ஞானிகளை அடையாளம் காட்டி, சமயங்களையும் மதங்களையும் தழைத்தோங்கச் செய்து, அவர்களுக்கு ஞானம் போதித்து, ஞானம் தரும் மரங்களாக இருந்துள்ளன.
சைவ சமயத்தின் தலையாய குறிக்கோளான அன்பையும், அறிவையும் உணர்த்துவதற்காக அவதாரம் செய்த வாதவூரடிகளுக்கு, திருப்பெருந்துறை என்ற தலத்தில் உள்ள "குருந்த மர'த்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "மாணிக்கவாசகர்' ஆனார்; பெளத்த மதம் சிறந்தோங்க அவதரித்த சித்தார்த்த கெளதமர் என்பருக்கு பிகாரில் உள்ள "கயை' என்ற இடத்தில் இருந்த "போதி' மரத்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "புத்தர்' ஆனார்.
சமண மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய வர்த்தமானருக்கு "சாலா' என்ற மரத்தடியில் ஞானம் கிடைத்த போதுதான் மாபெரும் ஜைனத் துறவியான "மகாவீரர்' எனப் போற்றப்பட்டார்.
இப்படி மணிவாசகருக்கு "குருந்த' மரமும், புத்தருக்கு "போதி' மரமும், மகாவீரருக்கு "சாலா' மரமும்தான் ஞானம் தரும் மரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. அதனால்தான் இன்றைக்கும் அவை போற்றப்படுகின்றன.
காற்றில் இருக்கும் வெப்பத்தையும் அசுத்தக் காற்றையும் தாம் வாங்கிக்கொண்டு, உலகை ஒருசேர குளிர்விக்கும் ஒரே குளிரூட்டி இயந்திரம் மரங்கள்தாம். இன்றைக்கு நமக்குப் பயன் தரும் பலவகை மரங்களை நம் முன்னோர் நட்டிருக்காவிட்டால், நாம் நிழலின் அருமையையும் அதன் தண்மையையும் உணர்ந்திருக்கவே முடியாது.
சமீபத்தில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 8,000 வீடுகள் மட்டுமே உள்ள ஒரு சிறிய கிராமமான, "பிபிலாந்திரி'யில் நிகழ்ந்துள்ளது. அக்கிராமத்தின் தலைவரான ஷியாம் சுந்தர் பலிவாலின் மகள் இளம் வயதில் இறந்துவிட்டதால், அவள் நினைவாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி ஒரு குழுவை (கமிட்டி) அமைத்துள்ளார்.
அதன்படி, அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்கள் நடப்படுகின்றன. ஓராண்டில் 60 பெண் குழந்தைகள் பிறந்தால், 6,660 பயன்தரும் மரங்கள் நடப்படுகின்றன.
அந்த மரங்களை பெண்களே பராமரிக்கும் வாய்ப்பையும் தந்து, அதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இக்குழுவினர் ஏற்படுத்தித் தருகின்றனர்.
அது மட்டுமல்ல, அந்தப் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழுவின் சார்பில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ரூ.21 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தாய்-தந்தையரின் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் சேமித்துவிட வேண்டுமாம்.
அந்தப் பெண் 20 வயதாகும்போது மரம் வளர்வது போல இந்தத் தொகையும் வளர்ந்து அந்தப் பெண்ணின் கல்விக்கும், திருமணத்துக்கும் உதவுகிறது.
இந்த நடைமுறைகளை ஒவ்வொரு கிராமமும் பின்பற்றினால் என்ன?
சங்கப் புலவர் ஒருவர், மரத்தோடு தொடர்புடைய மிக நுட்பமான செய்தி ஒன்றை நற்றிணையில் (பா.172) பாடியுள்ளார். தலைவன்-தலைவி இருவரும் ஒரு பூஞ்சோலைக்குள் நுழைகின்றனர். அங்கே ஒரு புன்னை மரம் இருக்கிறது. அதன் அடர்ந்த கிளைகளின் நிழலில் அமர்ந்து காதல் மொழிகள் பேச ஆசைப்படுகிறான் தலைவன். ஆனால், "இந்த இடத்தில் வேண்டாம்' எனத் தலைவி வெட்கப்பட்டு மறுக்கிறாள்.
"என்ன காரணம்?' என்று கேட்கிறான் தலைவன். "இந்தப் புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும்' என்கிறாள். "மங்கைக்கு மரம் சகோதரியா?' என அவன் கேட்க நினைப்பதற்குள் அவளே சொல்கிறாள்:
"என் தாய் இளம் வயதில் இச்சோலையில் வந்து விளையாடுவாளாம். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த ஒரு புன்னை விதையை இந்த மண்ணில் ஊன்றி வைத்திருக்கிறாள். அவள் கன்னிப் பருவம் எய்தியபோது இந்த மரமும் வளர்ந்துள்ளது. என் அன்னை வளர்த்ததால் இந்த மரம் எனக்கு சகோதரி உறவு ஆனது. அதனால், என் சகோதரியின் முன்பு உன்னோடு காதல் கதை பேசுவது எவ்வாறு? எனக்கு நாணம் உண்டாகாதா?'' என்கிறாள்.
இப்படி அஃறிணையைக்கூட உயர்திணையாக்கிக் காட்டி, மரங்களுக்குப் பெருமை சேர்த்து மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
ஆகவே, நாம் ஒன்பதைப் பிடுங்கினால் ஒன்றையாவது நட்டு, நம் சந்ததியினரை உலக வெப்ப மிகுதிக்கு ஆளாக்காமல் பாதுகாப்போம் - நாமும் பயன் பெறுவோம்.

(தினமணி - தலையங்கப் பக்கக் கட்டுரை)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!