உடன்போக்கிற்குத் தாயே துணை...

உடன்போக்கிற்குத் தாயே துணை!

 

First Published : 10 May 2015 06:57 PM IST (தினமணி - தமிழ்மணி)
சங்க அக இலக்கியத்தில் தலைவியின் அன்னையான "நாற்றாய்' என்பவளின் பங்கு குறிப்பிடத்தக்கது. வயது வந்த ஆணும் பெண்ணும் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை சங்ககாலம் தொட்டே இருந்ததை தமிழ் அக இலக்கியம் மட்டுமே விரிவாகப் பேசுகிறது. ஐந்திணை ஒழுக்கத்தின் அடிப்படையில் களவு, கற்பு என்னும் நிலையில் மக்களின் இல்லற வாழ்க்கையின் நுட்பங்களையும் மேன்மைகளையும் அழகுற வகுத்தளித்துள்ளார் தொல்காப்பியர்.
இல்லற வாழ்க்கை, களவு வாழ்க்கையில் தொடங்கி கற்பு வாழ்க்கையில் நிறைவுபெற வேண்டும். அதுவே சிறந்த இல்லற ஒழுக்கமுமாகும். இதில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களைக் காட்டிலும், உள்ளத்தால் ஒன்றுபட்டு இணைந்த களவு (காதல்) மணங்கள்தான் சங்ககாலத்தில் அதிகம் நிகழ்ந்துள்ளன. அப்போது அதற்கு எதிர்ப்பும் இருந்திருக்கிறது; வரவேற்பும் இருந்திருக்கிறது என்பதற்கு "நற்றாயே' சான்றாகிறார்.
 தன் மகளின் களவு வாழ்வை எதிர்த்தாலும், பின்னர் மகிழ்வதும் மகள் உடன்போக்கு சென்றுவிட்ட பின்னர் துன்பப்படுவதுமான - வெளியில் கூறமுடியாத அவத்தையில் தவிக்கும் நற்றாய் மிகவும் பரிதாபத்துக்குரியவள் - பாராட்டுக்கும் உரியவள்!
தன் குடும்பத்துக்குப் பழி வந்து சேர்ந்துவிடுமே என அஞ்சி, உடம்போக்குக்கு எதிராகச் செயல்படும் தாயையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தன் தாயை, "அறனில்லாத தாய்' (ஐங்.385) என்று தலைவி ஒருத்தி கூறுகிறாள் என்றால், அத்தாயின் "கடுங்காவல்' எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்!
இன்னொரு தாய், ""அவனோடு உடன்போக்கு சென்ற மகளின் தாய்' என்று என்னைப் பெயரெடுக்க வைத்துவிட்டாளே, எனக்கு இப்படியா ஓர் அடையாளம் வந்துசேர வேண்டும்?'' (ஐங்-380) என்று வருந்திப் புலம்புகிறாள்.
நற்றிணை 184-ஆவது பாடலில் இடம்பெறும் ஒரு தாய், ""என் ஒரே மகள் அவள். அவளும் கூர்வேல் காளையோடு நெருநல் அருஞ்சுரம் சென்றுவிட்டாள். ஆனால், "கவலைப்படாதே' என்கிறீர்கள். எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்? "உள்ளின் உள்ளம் வேகிறதே' என்று புலம்பும் அவள், "என் மகள் நடைபயின்று ஆடிய இந்த முற்றத்தைக் காணும் போதெல்லாம் என் உள்ளம் வேகிறதே!' என்று உடன்போக்கு சென்ற மகளை நினைத்து வேதனையோடு கூறுகிறாள்.
ஆனால், தாயே தன் மகளை அவள் காதலனுடன் (உடன்போக்கு) அனுப்பி வைத்த நிகழ்வுகளும் சங்க காலத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார், உடன்போக்கிற்குக் காரணம் "தாய்தான்' என்கிறார். சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் தாயே உடன்போக்கிற்கு ஏற்பாடு செய்வதைக் காணமுடிகிறது. பெண்பாற் புலவரான ஓதலாந்தையார் "மகள் போக்கியவழித் தாயிரங்கு பத்து' என்றொரு துறையிலேயே பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்பத்தில் ஒரு பாடல் (ஐங்.371) வருமாறு:
""மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுகதில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதற் குறுமகள் போகிய சுரனே!''
""பெண் மக்களின் ஒழுக்கத்திற்குக் காப்பாள் தாயே. யாதும் தவறு நேரின் "இவள் வளர்த்த அழகு இது' என்று ஊரார் தாய் மேல் பழிசுமத்தக் காணலாம். உடன்போக்குத்துறைப் பற்றிய பாடல்களைத் தொகுத்து வைத்து நோக்கின், அப்போக்கிற்குக் காரணம் "தாய்' என்பது தெளிவாகும்'' என்கிறார் வ.சுப.மாணிக்கனார் (தமிழ்க்காதல், பக்.89).

"இவ்வாறு ஆண்-பெண் களவு வாழ்க்கையில் வந்தமையும் உடன்போக்கு நிகழ்ச்சிகளை உடன்போக்கின் முன்நிகழ்ச்சிகள், உடன்போக்கின் பின்நிகழ்ச்சிகள் என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம்' என்பார் பதிப்பாசிரியர் சி.கணேசையர் (தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினயருரையும் முன்னைந்தியல்கள், பாகம்-1)
உடன்போக்கிற்குத் தாயே தன் மகளை அனுப்பி வைப்பதும் அதுவே சிறந்த வழி - அறநெறி எனத் தன் மகள் தெளிவாக உணர்ந்து செயல்பட்டுள்ளாள் எனத் தாய் கருதுவதும் சங்கத் தாயின் துணிவான உள்ளத்தையும், மகள் தன் மனதுக்கு உகந்தவனோடு இல்லறம் நடத்துவதே சிறந்தது என்பதையும் புலப்படுத்துகிறது. அத்தகைய துணிவான சங்கத் தாயின் உள்ளம், இன்றைக்குள்ள தாய்மார்களுக்கும் வேண்டுமே...!
சங்கத்தமிழ் அக இலக்கியத்திலிருந்து இன்றைய பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுதான்: மகளோ - மகனோ நீங்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்; இல்லையேல், தள்ளிநின்று, அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழவிட்டு மகிழுங்கள்.
-மணிவாசகப்பிரியா  (இடைமருதூர் கி.மஞ்சுளா)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!