தாய்ப் புலம்பல்

தாய்ப் புலம்பல்!

First Published : 14 June 2015 12:58 AM IST
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய்-தந்தையர் எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மீது அன்பு, பாசத்தை மிதமிஞ்சி வைத்து, சொந்தம் கொண்டாடக்கூடிய உரிமை பெற்றோருக்கு மிகமிகக் குறைவு. காரணம், என்றைக்கு இருந்தாலும் அவர்கள் வேறொரு இல்லத்திற்குச் சென்று வாழவேண்டியவர்கள்!
பெண் பிள்ளைகளைப் பொருத்தவரையில், அவர்கள் தங்கள் மனதுக்குகந்த துணையைத் தேர்ந்தெடுத்து, அவனோடு இல்லறம் நடத்துவதே சிறந்த அறநெறி } நல்லறம் என்பதை உணர்ந்துவிட்டால், பிறகு, அவர்களுக்குத் தாய்-தந்தை பாசம் ஒரு பொருட்டாகத் தெரியாது. பாசம் என்ற கட்டுத்தறியை முறித்துக்கொண்டு - அறுத்துக்கொண்டு ஓடச்செய்யும் (உடன்போக்கு) சக்தி காதலுக்கு - களவு வாழ்க்கைக்கு உண்டு. அதனால், பெற்றோர் அவர்கள் மீது அளவோடு பாசம் வைக்க வேண்டியவர்களாகின்றனர். இப்படித்தான் சங்க இலக்கியத் தாய் ஒருத்தி, தன் மகள் மீது வைத்த மிதமிஞ்சிய பாசத்தால், புலம்பித் தவிக்கிறாள்.
தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணைவரோடு மகள் உடன்போக்கு சென்றுவிடுகிறாள். அவள் சென்ற பாதையோ சுட்டெரிக்கும் பாலைவனம். அப்போது அவளுக்கு ஏற்படும் துன்பங்களை நினைத்துத் தாய்ப் புலம்புகிறாள். இதை "நாலடியார்' பாடல்,
""அரக்கு ஆம்பல் நாறும்வாய், அம்மருங்கிற்கு அன்னோ!
பரல்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும், "பைஎனப் பைஎன' என்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி'' (பா.396)
என்கிறது. செவ்வல்லி மலர்போல மணம் வீசும் வாயையும், அழகிய இடையையும் உடைய அவளுக்கு, செம்மை நிறைந்த பஞ்சுக்குழம்பை (பஞ்சுகொண்டு) எடுத்துக்கொண்டு பூசினாலும் "மெதுவாக... மெதுவாக...' என்று சொல்லிக்கொண்டு பயந்து, பின்னே இழுத்துக் கொள்கின்ற பாதங்கள் அவளுடையவை. அப்படிப்பட்ட பாதங்கள், ஐயகோ.... இன்று பருக்கைக் கற்கள் நிறைந்த பாலைவனத்தின் கொடுமையை எவ்வாறு தாங்கிக் கொண்டனவோ? மெல்லிய தன்மையுள்ள என் மகள் கொடுந்தன்மையுள்ள பாலைவனத்தை தன் தலைவனோடு எப்படித்தான் கடந்து சென்றாளோ?' எனப் புலம்புகிறாள்.
ஆசை ஆசையாக சீராட்டி, பாராட்டி வளர்த்த மகள், தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டாலும், அவள் மீது கோபப்படாமல் அவள் படும் சிரமங்களை நினைத்துப் புலம்பும் இத்தாயின் உள்ளம் வேறு யாருக்கு வாய்க்கும்?
இன்னொரு தாய் மிகவும் பரிதாபத்துக்கு உரியவள். "முலைக் காம்புகளும் முத்து மாலையும் அழுந்தும்படி என் உடம்பு முழுவதையும் தழுவிக்கொள்வதன் இலக்கணத்தை (காரணத்தை) நான் ஒன்றும் அறியேன். எனது மலரில் உள்ள இலக்குமி போன்ற மகள், இப்படிச் செய்ததன் குறிப்பு, மான் கூட்டங்கள் புலிகளைக் கண்டு அஞ்சுகின்ற வழியிலே, என்னைவிட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத்தான் இவ்வாறு செய்தாளோ?' என்று நினைக்கிறாள். இதன் உட்கருத்தாவது, "என் மகள் நேற்று என்னைத் தழுவிக்கொண்டு தூங்கியதற்குக் காரணம், என்னைவிட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத்தான் போலும்!' என்று மகளைப் பிரிந்த வேதனையில் புலம்புகிறாள்.
""முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி'' (பா.399)
இவ்வாறு, நாலடியார் "காமநுதல்' இயலில், பெண் பிள்ளை மீது வைத்த அளவுகடந்த பாசத்தினால் சங்கத் தாய்மார்கள் புலம்புவதை விளக்குகிறது. நாலடியார் மட்டுமல்ல, சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் தாய்மார்கள் பலரின் புலம்பலைக் கேட்க முடிகிறது. என்றாலும், காலம்தோறும் இந்த உடன்போக்கு நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. தாய்மார்களின் அழுகுரல் ஓலமும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. தாய்மார்கள் இப்படி அழுது புலம்புவதைத் தவிர்க்க ஒரே வழி, பெண் பிள்ளைகள் மீது அன்பையும் பாசத்தையும் அளவோடு வைக்கப் பழகுவதே!
-ஜெய விஜயா (இடைமருதூர் கி.மஞ்சுளா)

நன்றி - தினமணி - தமிழ்மணி

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!