சக்கையா? சாரமா?

சக்கையா? சாரமா?

First Published : 04 July 2015 10:57 AM IST (தினமணி-சிறுவர்மணி)
பன்னிரெண்டு வயதான விமல் அறிவுத்திறன் கொண்டவன்..., ஆனால் முன்கோபி. கோபம் வந்தால் யார் எவர் என்று பாராமல் வாய்க்கு வந்தபடி திட்டி மனதைப் புண் படுத்திவிடுவான். விமலின் தந்தையும் தாயும் இது பற்றி மிகவும் கவலையுற்றனர்.
அவனுடைய நண்பன் கோபி நல்ல பழக்கமுடையவன். ஒருநாள் விமல் கோபியின் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பினான்.

""அம்மா, கோபியோட பாட்டி, நான் யாருகிட்டேயாவது சண்டை போட்டால் என்னைப் பார்த்து "நீ சக்கையா? சாரமா? ன்னு சிரிச்சுக்கிட்டே கேக்கிறாங்களே...ஏம்மா?''என்று கேட்டான் விமல்.
""நீ போய் கை. கால் கழுவிட்டு வா.., சொல்றேன்'' என்றாள் விமலின் அம்மா. விமல் கை கால்களை அலம்பிக்கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தபடி, ""இப்ப சொல்லுங்க..., ஏன் அந்தப் பாட்டி அப்படி சொன்னாங்க?''என்று திரும்பவும் கேட்டான்.
""விமல் நீ கரும்பு ஜூஸ் குடிச்சிருக்கியா?''
""ஓ..., குடிச்சிருக்கேனே''
""அதை எப்படித் தயாரிக்கறாங்கன்னு கவனிச்சிருக்கியா?''
""கவனிச்சிருக்கேனே..., கரும்பை எடுத்து ஒரு மிஷினில் வைத்துப் பிழிந்து ஜூஸ் கொடுப்பாங்க, அவ்வளவுதான்''
""சரி, நாளைக்கு விளையாடப் போகும்போது ஏதாவது கரும்பு ஜூஸ் கடை இருந்தா..., அந்தக் கடைக்காரர் எப்படி ஜூஸ் போடுறார்னு கவனமாப்பார்த்துட்டு வந்து சொல்லு, அப்புறமா அந்தப் பாட்டி உன்னை ஏன் அப்படிச் சொன்னாங்கன்னு சொல்றேன்''
""என்னம்மா நீங்க? கரும்பு ஜூஸýக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?''
என்று வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டு வேறு அறைக்குச் சென்றுவிட்டான் விமல்.

மறுநாள் விளையாடப் போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும் வாராததுமாக தன் கால் செருப்புகளைத் தாறுமாறாக வீசி எறிந்தான். கதவை "பட்'டென்று மூடினான். யாரையோ முணுமுணுத்தபடி திட்டிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு வந்த அவன் தாய்,
""என்னாச்சு விமல்? ஏன் இவ்வளவு கோவமா இருக்கே?''
""கோபி வீட்டுக்கு வந்திருக்கிற அவனோட மாமா பையன் என்னைக் கண்டபடி திட்டிட்டாம்மா''
""நீ என்ன செஞ்சே..., அவனோட சண்டை போட்டியா?''
""இல்லம்மா..., கோபியோட கிரிக்கெட் பேட்டை வச்சி விளையாடிக்கிட்டிருந்தேன். அதை எங்கிட்டக் கொடுடான்னு கேட்டுத் தொல்லை பண்ணினான்.''
""அதுக்கு நீ என்ன செஞ்சே?''
""நான் தரமாட்டேன்னு சொன்னேன்''
""அப்புறம்?''
""அதுக்கு என்னைக் கண்டபடி திட்டினான்..., எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு..., ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சிரிச்சாங்க தெரியுமா?'' என்று விமல் அழத்தொடங்கினான்.
""சரி, சரி, வருத்தப்படாதே..., நீ வழக்கமா செய்யறதைத்தானே அவன் செஞ்சிருக்கான்..., இதுக்கு ஏன் வருத்தப்படணும்?'' என்று சொன்ன அம்மாவை முறைத்துவிட்டு படுக்கையறைக்குச் சென்று படுத்துவிட்டான். அவனை சமாதானப் படுத்தவே முடியவில்லை. மறுநாளும் அவன் வெளியில் செல்லவில்லை. தன் விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். நடுநடுவே யாரையோ திட்டி முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
இதனைக் கவனித்த அவன் அப்பா, ""விமல், சட்டுனு கிளம்பு பார்ப்போம்..., நாம இன்னிக்கு வெளியில போகலாம்..., உனக்குப் பிடிச்ச கரும்பு ஜூஸ் வாங்கித் தரேன்'' என்றார்.
அப்பா கூறியதுதான் தாமதம்... அன்றைக்கு அம்மா சொன்னது இப்போது சட்டென்று நிûனைவுக்கு வந்தது. ஆகா...! கரும்பு ஜூஸ் கடை!
""இதோ..., கிளம்பரேம்பா''என்று மகிழ்ச்சியாக அப்பாவுடன் வெளியில் சென்றுவிட்டான்.
இரண்டு மணிநேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிய விமல், ""அம்மா, கரும்பு ஜூஸ் கடையில என்ன நடந்தது தெரியுமா?''
""என்ன நடந்தது?''
""கரும்பை எடுத்து அந்த ஜூஸ் பிழியற மிஷினுக்குள் விட்டான். அப்புறம் கரும்பில் உள்ள சாறு மட்டும் ஒரு பாத்திரத்தில் கொட்டி சக்கை வெளியே விழுந்திடுச்சு..., இப்ப சொல்லுங்க..., அந்தப் பாட்டி ஏன் அப்படிச் சொன்னாங்கன்னு''
""நீ கோபமா இருக்கும் போது பேசற வார்த்தைகள் எல்லாம் அந்த சக்கைக்குச் சமம். அது ருசிக்காது. அதை யாரும் விரும்பவே மாட்டாங்க. அதுவே நீ அன்பா, பொறுமையா சந்தோஷமா இருக்கறப்ப தானே இனிமையான சொற்கள் வரும்..., கரும்பிலேர்ந்து ஜூஸ் வர்றா மாதிரி. அதை எல்லாரும் விரும்புவாங்க..., ருசிப்பாங்க..., ஒரு டம்ளர்லே ஜூஸýக்கு பதிலா சக்கையைக் குடுத்தால் நமக்கு எப்படி இருக்கும்? அது போலத்தான்...நாம பேசற சுடு சொற்களும்! பொறுமை என்கிற மிஷின்ல இனிமையான சொற்கள் ஜூஸா வரும்.
சக்கையை பிரித்து எடுத்து விடும். அது தூர எறியப்படவேண்டியது. உன்னை ஒருத்தன் கண்டபடி திட்டினதுக்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டே?''
""ஆமாம்மா..., ஏம்மா என் மனசு கஷ்டப்பட்டது?
""ஏன் தெரியுமா? மனசுல சக்கையா பத்திரமா வச்சிருந்தே... அந்த வார்த்தையெல்லாம் தூர எறிஞ்சிருக்கணும்! அன்பா இருக்கணும். பொறுமையா இருக்கணும். தானே இனிமை, மகிழ்ச்சி எல்லாம் ஏற்படும்.
இனிமையையும் மகிழ்ச்சியையும்தான் நண்பர்களுக்குள் பங்கு போட்டுக்கணும்..., இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அன்பை பங்கு போட்டுக்கிட்டா அது குறையாது.., பெருகும்..அன்பு ஜூûஸவிட இனிமையானது''
""சரிம்மா..., இனிமே யாரையும் திட்டமாட்டேன்மா...கோபமா பேச மாட்டேன்மா''
""நாளைக்கு கோபி வீட்டுக்குப் போவியா?''
""நிச்சயமாப் போவேன்...கோபியோட மாமா பையன்கிட்டே மன்னிப்பு கேப்பேன்.''
""கோபியோட பாட்டி உன்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?''
""பாட்டி, நான் இனிமே எப்பவுமே சாரம்தான்''னு சொல்லுவேன்

-இடைமருதூர் மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!