வெற்றியின் விதை!

வெற்றியின் விதை!

First Published : 27 March 2015 02:10 PM IST
ஒரு வாரமாகவே சுகுமார் மிகவும் குழம்பிப் போயிருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு, பரீட்சைக்கு இன்னும் 15 நாள்களே இருந்தன. பரீட்சை பயம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொருபுறம் அவன் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தன அவன் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில சம்பவங்கள். அம்மாவிடம் எப்படிச் சொல்வது? தவறாக நினைத்து விடுவாரோ? அப்பாவிடம் சொன்னால் கண்டபடி திட்டுவாரோ? வேறு யாரிடம் இதுபற்றி கேட்கலாம்? என்ற எண்ணங்கள் அவனைப் படிப்பில் கவனம் தெலுத்த முடியாதபடி குழப்பிக் கொண்டிருந்தன.
 பரீட்சை நாள்களில் தினமும் சுகுமார், இரவு 9 மணியிலிருந்து 12 மணிவரை படிப்பது வழக்கம். அன்றைக்கும் வழக்கம் போல இரவு 9 மணிக்கு மேல் தன் அறையில் படிக்க உட்கார்ந்தான். ஆனால், கவனமெல்லாம் படிப்பில் இல்லை. மடியில் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு மோட்டு வளையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அவனுக்குத் தேநீர் கொண்டுவந்த அவன் தாயார், ""என்ன சுகுமார் படிக்காம எங்கயோ வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கியே? எண்ணமெல்லாம் எங்க இருக்கு?'' என்றார்.
 ""ஏம்மா, நான் ஃபஸ்ட் ரேங்க் எடுப்பேனா?''
 ""அதிலென்ன சந்தேகம் உனக்கு? நல்லா படிச்சு, நிறைய மார்க் வாங்கினா, நீதான் 
 ஃபஸ்ட்''
 ""அதில்லேம்மா.. ஏதாவது சப்ஜெக்ட்ல மார்க் குறைஞ்சு போச்சுன்னா என்னை வீட்டைவிட்டு அனுப்பிடுவீங்களா?''
 ""சீ.... என்ன அசட்டுத்தனமான பேச்சு இது? குறைந்த மார்க் வாங்கினா எந்தத் தாய்-தந்தையாவது வீட்டை விட்டு அனுப்புவாங்களா? இதெல்லாம் யார் உனக்குச் சொன்னது? கண்டதையும் உட்கார்ந்து யோசிக்காம கவனமாகப் படி'' என்ற தாயின் மடியில் படுத்து அழத்தொடங்கினான் சுகுமார்.
 ""அட, என்னாச்சு சுகுமார்? எதுவா இருந்தாலும் மனம் விட்டு அம்மாகிட்ட சொல்லு. எந்த சப்ஜெக்ட் கஷ்டமா இருக்கு? வாத்தியார் சொல்லிக் கொடுக்கிறது புரியலையா?''
 அவள் பேசி முடிப்பதற்குள், அறைக்குள் நுழைந்த சுகுமாரின் அப்பா, ""அட, என்னாச்சு என் சிங்கக்குட்டிக்கு? ஏன் அழறான்?'' என்று அவன் அருகில் அமர்ந்து, அவன் கைகளை எடுத்து, தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு பாசத்தோடு கேட்டார்.
 ""இல்லப்பா... என் ஃபிரண்டு வாசுவோட அண்ணன் போன வருஷம் பிளஸ்டுல குறைந்த மார்க் எதுத்தாங்கறத்துக்காக, அவனோட அப்பா அவனைத் திட்டித் திட்டியே அவன் வீட்டை விட்டே ஓடிப்போயிட்டானாம். அவன் முதல் மதிப்பெண் எடுத்து பத்திரிகையில் எல்லாம் புகைப்படம் வரும்னு தெரிஞ்சவங்ககிட்டே எல்லாம் சொல்லிக்கிட்டிருந்தாராம். ஆனால், அவன் பெயிலாயிட்டதால ரொம்ப கோபம் வந்து தினமும் திட்டிக்கிட்டே இருந்தாராம். என் வகுப்பில் படிக்கும் சாந்தியோட அக்காவும் இப்படித்தான், பாஸ் பண்ணலைங்கற அவமானத்துல தற்கொலை செய்துகிட்டாளாம். சாந்தி சொல்லி ரொம்ப வருத்தப்பட்டா. இதெல்லாம் பாக்கிறப்போ... எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா? ஒருவேலை நானும் ஃபஸ்ட் ரேங்க் எடுக்கலைன்னா, பாஸ் பண்ணலைன்னா உங்களை விட்டுப் பிரிஞ்சுடுவேனோன்னு பயமா இருக்குப்பா'' என்று அழுதான்.
 ""என்ன பேசற நீ? அப்படியெல்லாம் நீ நினைக்கவே கூடாது. இந்த எண்ணமே உனக்கு வரக்
 கூடாது. எங்க காலத்திலெல்லாம் ஆசிரியர்களும் பெற்றோரும் பிள்ளைகளின் திறமையைத்தான் பார்த்தார்கள்; மதிப்பெண்களைப் பார்க்கவில்லை. ஆனால், இன்றைக்கு விளம்பர உலகமாகிவிட்டதால், தங்கள் பிள்ளைகள் முதல் மார்க் வாங்கி, அது பத்திரிகையில் வரவேண்டும், அதைப் பலரிடம் காண்பித்துப் பெருமையடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்தான் அதிகம். எல்லோராலும் முதல் மார்க் வாங்க முடியுமா? அதனால்தான், இன்றைக்குப் பல தற்கொலைகள் நடக்கின்றன. வீட்டை விட்டு ஓடுகிறார்கள். இந்த தடவை இல்லை என்றால் என்ன? அடுத்த முறை நன்கு படித்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணிக்கலாம் என்றுதான் எங்களிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தனர் எங்கள் பெற்றோர்கள். இதனால், தோல்வியைக் கண்டு துவண்டு விடாத மனத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்தார்கள். ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக மாறிப்போச்சு. 
 ப்ளஸ் டூவில் இரண்டு முறை ஃபெயிலாகி பின் முயன்று படித்த நான், இன்றைக்கு உயர்ந்த பதிவியில் இருக்கிறேனே! உன் அப்பாவையே முன்னுதாரணமாக எடுத்துக்கொள். தோல்வியைக் கண்டு துவண்டு விடாத மனப்பக்குவம் இருந்தால் போதும், நாம் நினைத்தை அடைந்து விடலாம். எண்ணம்தானே வாழ்க்கை சுகுமார்? எண்ணத்தில் ஊக்கமும், தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும், சாதித்துக்காட்ட வேண்டும் என்கிற துணிவும் இல்லாத கோழைகள்தான் இப்படியெல்லாம் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்துகொண்டு, விலை மதிக்க முடியாத இந்த உயிரை இழப்பார்கள். 
 பரீட்சை பயம்தான் மாணவர்களை முதலில் கொல்லும் நோய். அதனால்தான், "பயம்தான் மரணம்' என்றார் சுவாமி விவேகானந்தர். எந்த நிலையிலேயும் எதைப் பற்றியும் பயப்படாமல், ஊக்கத்தோடு முயன்றால், நிச்சயம் உன் இலக்கை நீ ஒருநாள் அடைந்துவிடுவாய். முதல் மார்க் வாங்குவதோ, பாஸ் பண்ணுவதோ மட்டுமே வாழ்க்கையின் லட்சியம் அல்ல. இதையெல்லாம் கடந்த உயர்ந்த லட்சியம் ஒவ்வொருவர் வாழ்விலும் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களுக்காகத் துவண்டு போகாமல் இருக்க வேண்டும். உன் போன்ற பிள்ளைகளுக்காகத்தான் "ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு' என்று ஒüவைப்பாட்டி பாடிவைத்திருக்கிறார். அவர் மட்டுமா? திருவள்ளுவரும் ஊக்கத்தின் அவசியத்தையும், வினைத்திட்பத்தின் மேன்மையையும், இடுக்கணழியாமையையும் பாடியுள்ளாரே! இவர்கள்தான் நம் வழிகாட்டிகள். இவர்கள் கூறிய வழியில் சென்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். 
 ""இதோ வருகிறேன் இது'' என்று கூறியவர், புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து, குறிப்பிட்ட அந்தப் பக்கத்தை அவனிடம் கொடுத்து, அதை வாய்விட்டுப் படிக்கச் சொன்னார்.
 அதை வாங்கிய சுகுமார், தந்தை அடிக்கோடிட்டு வைத்திருந்த அந்த வரிகளைப் படிக்கத் தொடங்கினான். ""செவிடு, மண்டு, மூளைவளர்ச்சி இல்லாதவன் என்றெல்லாம் ஆசிரியராலும் மாணவராலும் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டதால், பள்ளிக்குச் செல்வதை விடுத்து, தன் தாயிடமே கல்வி பயின்றவர் தாமஸ் ஆல்வா எடிசன், தனது 15ஆவது வயதில் 1868 -இல் வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் மின்விளக்கைக் கண்டுபிடித்தார், உலகமே அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. தனக்குக் காது கேட்கவில்லை என்றாலும் பிறர் கேட்டு ரசித்து மகிழவேண்டும் என்ற எண்ணத்தில் கிராமபோனைக் கண்டுபிடித்தார். அதன் மூலம், அவர் கோடீஸ்வரர் ஆனார். ஒலியைப் போலவே ஒளியையும் பதிவுசெய்ய முடியும் என சினிமாவைக் கண்டுபிடித்தபோது, "கண்டு பிடிப்புகளின் தந்தை' என்று அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.
 1941-இல் அவரது சோதனைக் கூடத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டபோது, ஆறுதல் சொல்ல வந்த நண்பனைப் பார்த்து, ""தீ எவ்வளவு அழகாக எரிகிறது பார். ரசாயனப் பொருள்களைத் தவறான விகிதத்தில் கலந்துவிட்டேன் என்பதை 67ஆவது வயதில் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்தத் தோல்வியும் எனக்குப் படிப்பினையே'' என்றார் சிரித்தபடி. 81ஆவது வயதில் தன் மரணம் வரை 1,093 கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை நான் வீழ்ச்சியாகக் கருதாததே'' என்றார்.
 வாய்விட்டுப் படித்து முடித்தான் சுகுமார். உடனே தந்தை கூறினார். ""பார்த்தாயா? எடிசனின் மனஉறுதியை! இவர் மட்டுமா, ஆப்ரகாம் லிங்கன், 15ஆவது வயதில்தான் பள்ளிக்கே சென்றார். அதுவும் அவர் பள்ளியில் படித்தது வெறும் 365 நாள்கள் மட்டும்தான். அவர் சாதிக்கவில்லையா?அதுபோல, போலியோவால் பாதிக்கப்பட்ட ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபர் ஆகவில்லையா? இப்படி தங்களுடைய குறைகளையே நிறையாக மாற்றி சாதித்துக் காட்டிய பலரையும் உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால், தோல்வியை வீழ்ச்சியாக நினைக்காதே; அது வெற்றிக்கான விதை என நினைத்துக்கொள்'' என்றவர், 
 ""நீ முதல் மார்க் வாங்கவில்லை என்றாலும், பாஸ் செய்யவில்லை என்றாலும் நீ என்றைக்குமே எங்கள் செல்லப் பிள்ளைதான். உன்னை நாங்கள் ஒருபோதும் இழக்கமாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களிடம் மனம்விட்டுப் பேசு. இனி, இப்படியெல்லாம் கண்டபடி யோசிப்பதை விட்டுவிட்டு, இப்போது போய் நன்றாகத் தூங்கு. நாளைக்குப் படித்துக் கொள்ளலாம்'' என்றார்.
 எடிசனைப் பற்றிப் படித்தும், தந்தை கூறியதைக் கேட்டும் மனத்தெளிவடைந்த சுகுமார், உடனே, அப்பாவை இறுகக் கட்டிக்கொண்டு "யு ஆர் மை சூப்பர்மேன் டாடி' என்று வாய்விட்டுக் கூறினான். இப்போது தன் மனம் மிகமிக லேசாகி, அப்படியே வானத்தில் பறப்பதைப்போல உணர்ந்தான். கூடவே, "என் டாடி போல எல்லோருக்கும் கிடைத்தால், இன்றைக்கு சாந்தியின் அக்காவும், வாசுவோட அண்ணனும் உயிரோடு இருந்திருப்பார்களே....' என்று நினைத்துக் கொண்டான்.
இடைமருதூர் கி.மஞ்சுளா
 

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!