"கடிசொல் இல்லை காலத்துப் படினே'

"கடிசொல் இல்லை காலத்துப் படினே'

First Published : 31 May 2015 01:03 AM IST
தமிழ் மொழி விசாலமடைய வேண்டும்
 
பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நம் நாட்டுப் பாஷைகளிலே வளர்வன வெல்லாவற்றிலும், உயிருள்ள பாஷைகளிலே உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதி, பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகரியப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், எழுத்தின் வரிவடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து, நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என் விருப்பம்.
-மகாகவி பாரதியார்

தமிழைப் பேண வேண்டும்!
 
 "தமிழில் பிறமொழிச் சொல் எதுவும் புகல் ஆகாது' எனப் புகல்வாரும் உளர். இது மொழி வளர்ச்சிக்குத் தடையாகும். புதிய கருத்துக்களும், பொருள்களும் சுட்ட, தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுவது தவறாகாது. ஆனால், அச்சொற்களைத் தமிழ் இயல்புக்கு இயையச் செப்பனிட்டுச் சேர்த்தல் வேண்டும். ஆன்ற பழந்தமிழ்ச் சான்றோர் இவ்வுண்மை அறிந்தே வடசொல், திசைச் சொற்களை விலக்காமல் தமிழில் கொண்டு வழங்கத்தக்க இயல்முறைகளைத் தம் மொழி நூலில் வகுத்து விளக்கியுள்ளார்.
 இந் நன்முறையை இகழ்ந்து இக்காலப் பெரியார் சிலர் தமிழ் மொழி மரபு - சொல்லாக்க நல்லியல்புகளுக்கு முழுதும் முரணாகப் பிறமொழிச் சொற்களைத் தமிழுக்கு இயையா அவ்வம் மொழிச் சிறப்பெழுத்து ஒலிமுறைகளுடன் கூட்டித் தமிழைப் பாழ்படுத்துகின்றனர்.
புதுமையைப் புறக்கணிக்காமல் விரும்பும் மேல் நாட்டவரும் தத்தம் மொழியில் பிற சொற்களை ஏற்றபடி மாற்றியே ஆளும் இயல்பை அறிகின்றோம். மெய் முதலாகத் தொடங்குவதும், இணையாகப் பல மெய்கள் தொடருவதும், தமிழில் இல்லா ஒலி இயல்புகளை உடையதுமான பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வழங்குவதும் தமிழ் இயல்பையே மாற்றிவிடுமாதலால் தவறாகும். அக்கேடு புகுத்தாமல் தமிழைப் பேண வேண்டும்.
-ச.சோமசுந்தர பாரதியார்

முதல் கடமை
 
ஒவ்வொருவனும் தன் தாய் மொழியின் மீது பேரன்பு கொண்டிருத்தல் முற்றும் இயற்கையே. பேரன்பு கொள்ளுதல் என்பது மொழியின் பெருமையை மட்டும் கூறி அதனோடு அமைந்துவிடுவதல்ல. உலகத்தில் வழங்கும் மொழிகளெல்லாம் இடைவிடாது மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் வரும் இயல்புடையன. இவ்வளர்ச்சிக்குத் தடையாக மேற்குறித்த அன்பு இருக்குமானால், அவ்வகை அன்பு நெறிதவறிய அன்பு என்றுதான் நாம் சொல்ல வேண்டும். குழந்தையை அதன் தாய் மிகவும் அன்போடுதான் போற்றி வருவாள். அதனோடு அவளுக்குத் தன் குழந்தை மேன்மேலும் விருத்தியாக வேண்டும் என்ற ஆசையும் இருத்தல் இயல்பல்லவா?
தாய்மொழி மீதுள்ள அன்பு காரணமாக, தமிழுக்கு முழுமுதல் தன்மை கற்பித்து அதைப்போன்ற சிறந்த மொழி உலகத்திலேயே இல்லையென்று சொல்வதும், எல்லா வகையான அம்சங்களிலும் அது பரிபூரண நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வதும் நமது அருமைத் தாய்மொழிக்குக் கேடு விளைவிப்பதாகும்.
குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அதன் அழகைப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருந்தால், அதன் உடலும் அறிவும் வலிவுற்று வளர்ந்துவிடமாட்டா. இங்ஙனமே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவனவற்றைச் செய்யாது, அதன் தொன்மையையும் பெருமையையும் பற்றியே நம்மவர்கள் பேசிக் கொண்டிருந்தால், அது முன்னேற்றம் அடைந்துவிட மாட்டாது. அதன் வளர்ச்சியைப் பேணுவதே நமது முதற் கடமையாகும்.
தூய தமிழ்ச் சொற்களை ஆளும் இடமும் உண்டு; பிறமொழிச் சொற்களை ஆளும் இடமும் உண்டு; தகுதியறிந்து சொற்களை ஆளுவதுதான் சிறந்த முறையாகும். தூய தமிழ் வாதம் பெரும்பாலும் வடமொழியை நோக்கி எழுந்தது. இதனை மேற்கொண்டவர்கள் வடமொழிச் சொற்கள் தவிர ஏனைய எல்லாம் தமிழ்ச் சொற்களே என்று கருதுகிறார்கள். மொழியாராய்ச்சியில் பயின்றவர்கள் அவ்வாறு சொல்லத் துணியமாட்டார்கள்.
ஒரு சாரார், "தூய தமிழ்' என்பது வேண்டுவதன்று. ஆனால், பிற்காலத்திலே சேர்ந்துள்ள வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் தமிழைக் கெடுத்துவிட்டன; இச்சொற்கள் வைசூரி நோயால் தோன்றிய வடுக்கள் போலத் தமிழின் மேனியழகைக் குலைத்துவிட்டன; தமிழ் நடையும் தளர்ந்து வலிகுன்றிப் போய்விடும் என்கின்றனர்.
ஒரு மொழியிலுள்ள சொற்கள் அம்மொழியைப் பேசும் மக்களுடைய அனுபவத்திற்கு அறிகுறியாக உள்ளன என்பதை மறந்துவிடலாகாது. ஏதேனும் ஒரு பழங்காலத் தமிழைக் குறித்தால், அதற்குப் பின் நிகழ்ந்த அனுபவங்களை உணர்த்தும் சொற்களை நாம் புறக்கணித்து விடுதல் கூடுமா? கூடாது. தமிழ் மொழியில் நிலைத்த வழக்காறாகப் புகுந்த பிறமொழிச் சொற்களெல்லாம் எக்காலத்தனவாயினும் தமிழ்ச் சொற்கள் என்றே கொண்டு வழங்குதல்தான் தகுதியாகும். பழந்தமிழ்க் கட்சியினரது கொள்கை பரவுமாயின், தமிழ் மொழியும் வடமொழியைப்போல வழக்கொழிந்து போவதற்கும் இடமுண்டு. பழஞ் சொற்களில் வழக்கொழிந்தனவற்றை நீக்கிவிட்டு, உயிருள்ள சொற்களோடு காலத்துக்கேற்ப புதுச் சொற்களும் கலந்து தமிழ் வளம் பெற்று விளங்க வேண்டும் என்பதுதான் நமது முன்னோர்களுடைய கருத்து.
"கடிசொல் இல்லை காலத்துப் படினே' (935) என்று தொல்காப்பியச் சூத்திரம் இதனையே வற்புறுத்துகிறது. சொற்களைப் போன்றே மொழிநடையும் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வரும். இதனையும் அறிந்து தற்காலத்திற்கு உரிய நடையைக் கையாளுதலே தக்கதாகும். ஆகவே, இப் பழந்தமிழ்க் கட்சியோடு போர்புரிந்து தமிழ்மொழி என்றும் தனது புதுநலத்தோடு விளங்குமாறு தமிழ் மக்கள் பணிபுரிந்து வரல் வேண்டும். எப்பொழுதும் காலத்தோடு ஒத்தியைந்து செல்லுமாறு தமிழ் மக்கள் தங்கள் தமிழ் மொழியை நன்கு பேணுதல் வேண்டும்.
எஸ்.வையாபுரிப்பிள்ளை

வழிகாட்டும் தொல்காப்பியம்
 
தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் இருவகையாக அமைந்திருக்கக் காணலாம். சில விதிகளைத் தொல்காப்பியர் தாமே கூறுவதுபோல் அமைந்திருப்பது ஒரு வகை; பிறர் கூற்றினை மேற்கொண்டு கூறுவதுபோல் அமைந்திருப்பது இன்னொரு வகை. தமக்கு முன்பு நிலவிய வழக்கைக் கூறுங்கால் பிறர் கூற்றாகவே கூறுவார். தமிழுக்கு எழுத்துக்கள் முப்பது என்பதும், அவை அகர முதல் னகர இறுவாய் எண்ணப்பட்டு வந்தன என்பதும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள செய்திகள் என்பது அவர் நூற்பாவால் அறியலாம். ஆனால், வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்குங்கால் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்று கூறும்போது தாமே கூறுவதுபோல் நூற்பா அமைந்துள்ளது.
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே'
(884)
என்னும் நூற்பாவில், "என்ப', "என்மனார்' போன்ற சொற்கள் இல்லாமையால், வடசொற்கள் தமிழில் கலக்குங்கால் வடவெழுத்துக்குரிய ஒலியால் எழுதப்பட வேண்டும் என்று விதி வகுத்தவர் தொல்காப்பியரேயாவார். இன்றும் இவ்விதி, பிறமொழிச் சொற்களை எவ்வாறு எடுத்தாளவேண்டும் என்பதற்கு நமக்கு வழிகாட்டுகின்றது.
ஆரியம் உலக வழக்கழிந்து ஒழிந்ததுபோல் தமிழ் ஒழியாது. தமிழுக்குரியோர் இந்நாட்டு மக்கள். எங்கும் பெரும்பான்மையினராய் உள்ளனர். பெரும்பான்மையினர் மொழியை - இலக்கண அமைப்பும் இலக்கிய வளமும் கொண்ட மொழியை - சிறுபான்மையினர் மொழி அழித்தல் இயலாது. ஆகவே, தமிழும் அதன்வழிப் பிறந்த மொழிகளும் ஒருநாளும் அழியா!

பேராசிரியர் சி. இலக்குவனார்
தொகுப்பு: பிஞ்ஞகன் (இடைமருதூர் கி.மஞ்சுளா)

நன்றி தினமணி - தமிழ்மணி

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!