கலைக்கோயிலைச் சிதைக்கலாமா?

கலைக்கோயிலைச் சிதைக்கலாமா?

உலகிலே மிகப் பிரம்மாண்டமான கோயில்; 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் திகழ்கின்ற தஞ்சைப் பெரியக் கோயிலைப் பற்றி விரிவாக ஏதும் கூறத்தேவையில்லை. காரணம், அக்கோயிலின் பெருமை சொல்லுக்கடங்காதவை.
உலகிலே மிகப் பிரம்மாண்டமான கோயில்; 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் திகழ்கின்ற தஞ்சைப் பெரியக் கோயிலைப் பற்றி விரிவாக ஏதும் கூறத்தேவையில்லை. காரணம், அக்கோயிலின் பெருமை சொல்லுக்கடங்காதவை.
விடை கிடைக்காத வினாக்களைத் தன்னகத்துள் கொண்டு இலங்கும் தஞ்சைப் பெரிய கோயில், நம் தமிழக சோழ வரலாற்றின் சிறப்புமிக்க வரலாற்றுப் பக்கங்கள். இன்றளவும் உலக அதிசயங்களுள் ஒன்றாகவே அது திகழ்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க இக்கோயிலின் பழைமையான பெயர் அழகாபுரி. இவ்வூர் பற்றிய மிகத் தொன்மையான குறிப்புகள் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் கல்வெட்டுகளிலும் திருநாவுக்கரசரின் திருவீழிமிழலை திருத்தாண்டகத்திலும் காணப்படுகின்றன.
செந்தலை எனும் ஊரில் உள்ள கல்வெட்டுப் பாடலில் "தஞ்சைச் செம்புல நாடு' என்னும் குறிப்பும் காணப்படுகிறது.
இன்றைக்கும் ஓவியக் கல்லூரி மாணவர்களின் கலைக்கூடாரமாக - கலைக்கோயிலாகத் திகழ்வது தஞ்சைப் பெரிய கோயில்தான்.
நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் அக்கோயிலின் அழகை தங்கள் தூரிகையால் உயிரூட்டி - புதுப்பொலிவு தந்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் உள்ள வெளிநாட்டவரெல்லாம் கண்டு அதிசயிக்கும் தமிழர்களின் கலைக்கோயில்.
அதைப் பராமரிக்கும் பொறுப்பும் கவனமாகப் பாதுகாக்கும் பொறுப்பும் ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு - அது கடமையும் கூட.
கோயிலைச் சுற்றியுள்ள இடதுபுற மண்டபத்தில் பார்வையாளர்களின், பக்தர்களின் காட்சிக்கு சில கிடைத்தற்கரிய சிலைகளை (பொருள் விளக்கம் என்ற தலைப்பில்) வைத்திருக்கிறார்கள்.
அந்தச் சிலைக்குக் கீழே அது எந்த ஆண்டு, யாரால், எங்கு கிடைத்தது? அந்தச் சிலையின் நதிமூலம், ரிஷிமூலம் என்னென்ன? அந்தச் சிலை யாருடையது (குறிப்பாக நடனம் ஆடும் மங்கையின் சிலை-படம்-) என்பன போன்ற விவரங்களை அந்தச் சிலையில் கீழே எழுதி (இரண்டு அட்டைகளில்) வைத்திருக்கிறார்கள்.
ஆனால், பொழுதுபோக்கிற்காகவே அங்கு வரும் சில கயவர்கள், அதில் பொறிக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்து அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதில், தங்கள் பெயரையும் காதலியின் பெயரையும், தங்களின் தேர்வு எண்களையும், தகாத சில சொற்களையும் எழுதி அந்தக் கலைக்கோயிலை அசுத்தம் செய்து வைத்திருப்பதைக் கண்டு கல்வெட்டு ஆய்வாளர்களும் பக்தர்களும் முகம் சுளிக்காமல் இல்லை.
இப்படி கண்டபடி எழுதுவது குற்றம் என்பதையும் அக்கோயில் நிர்வாகம் ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிறது.
ஆனால், அதையெல்லாம் அவர்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களால்தான் நம் பாரம்பரியமிக்க கட்டடக்கலையின் சிறப்பு சீரழிக்கப்பட்டு வருகிறது.
உடனடியாக நம் வரலாற்றுப் பொக்கிஷத்தைப் பாதுகாத்தாக வேண்டும். இவ்வாறு கிறுக்குபவர்களைக் கண்டிப்பதைவிட அதை பாதுகாக்கும் நடவடிக்கையை (செப்புத்தகட்டில் பொறித்து வைப்பது) உடனடியாக அரசு மேற்கொண்டாக வேண்டும்.
தமிழர்கள் புதிதாக எதையும் உருவாக்கவோ, கட்டவோ தேவையில்லை; நம் முன்னோர்கள் நமக்குத் தந்து சென்றிருக்கும் ஏராளமான கலைச் செல்வங்களைப் போற்றிப் பாதுகாத்தாலே போதும்! அதுவே நம்முடைய (அரசின்) மிகப்பெரிய கடமை!
நம் வரலாற்றுப் பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்காத நாடும் அரசும் அடுத்த தலைமுறையினருக்கு வெறும் கல்லையும் மண்ணையும் மட்டுமே காட்சிக்கு வைக்கும் நிலைமைக்குத் தள்ளப்படும் என்பது உண்மையிலும் உண்மை! அது வேதனையிலும் வேதனை!

(தினமணி - தலையங்கப் பக்கக் கட்டுரை)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!