உரிமைப் போர் இதழாளர்கள்

உரிமைப் போர் இதழாளர்கள்

First Published : 02 May 2015 02:30 AM IST
இதழியல் துறை' என்பது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தனித் துறையாகவே இயங்கி வருகிறது. பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளங்கலை தமிழ் இலக்கியம் (பி.லிட்.) படிக்கும் மாணவர்களுக்கு "இதழியல்' தனிப் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது.
"டையர்னல்' என்ற லத்தீன் சொல்லில் இருந்து தோன்றிய "ஜர்னலிசம்' என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமே "இதழியல்' எனும் சொல்.
தமிழ் இதழ்களின் வளர்ச்சிக்கு மூன்று போர்கள் (இந்தியாவின் சுதந்திரப் போர், இரு உலகப் போர்கள்) முக்கியக் காரணமாக அமைந்தன.
சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு, தினமணி, தினசரி, பாரததேவி, நவஇந்தியா, தேசபக்தன், நவசக்தி, திராவிடன், சண்டமாருதம் ஆகிய நாளிதழ்கள் சுதந்திரப் போருக்குக் குரல் கொடுத்தவைகளுள் முதன்மையானவை.
விடுதலை இயக்கத்துக்கும், பத்திரிகைகளுக்கும் இடையே இருந்த உறவை, "இந்தியாவில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை முதலில் அதிகரிக்கச் செய்தது சென்ற மகா யுத்தமாகும்.
யுத்தச் செய்திகளை ஜனங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலினால் பத்திரிகைகள் வாங்க ஆரம்பித்தார்கள். அதற்கு அடுத்தாற்போல, பத்திரிகைகள் அதிகரிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது மகாத்மாவின் சத்தியாகிரக ஒத்துழையாமை இயக்கங்கள் ஆகும்.
1920-ஆம் வருடத்தில் இந்த இயக்கங்களினால் பத்திரிகைகள் அதிகமாயின. 1930-ஆம் வருடத்திலிருந்து நமது நாட்டில் பத்திரிகைகள் அதிவேகமாய் வளர்ந்து வருகின்றன' என்றார் "தினமணி' நாளிதழின் முதல் ஆசிரியரும், "பேனா மன்னன்', "பத்திரிகை உலக ஜாம்பவான்' என்று போற்றப்படுபவருமான டி.எஸ்.சொக்கலிங்கம்.
இவ்வாறு, நாட்டின் விடுதலைக்காக எழுச்சிமிகு பத்திரிகைகளைக் கொண்டு வந்து புரட்சி செய்தவர்களுள் மகாகவி பாரதியார், பரலி. சு.நெல்லையப்பர், சுப்பிரமணிய சிவா, திரு.வி.க., டி.எஸ்.சொக்கலிங்கம், ம.பொ.சி., "இதழாளர்களின் நெப்போலியன்' என்று அழைக்கப்பட்ட சதானந்தம், ஜீவானந்தம், திருலோகசீதாராம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1927-இல் மும்பையில் "அசோசியேட் பிரஸ் ஆஃப் இந்தியா' என்ற செய்தி நிறுவனத்தைத் தொடங்கிய சதானந்தம் விடுதலைப் போர் செய்திகளை விறுவிறுப்பாக இந்திய இதழ்களுக்கும், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கினார். சென்னையில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' (1932), "தினமணி' (1934), "பாரததேவி' நாளிதழையும் தொடங்கி நடத்தினார்.
"எழுதுகோலும் தெய்வம் எழுத்தும் தெய்வம்' என்று போற்றி வாழ்ந்த பாரதியார், சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றி, "இந்தியா' (1907) என்ற வார இதழின் ஆசிரியராக அவதாரம் எடுத்தபோதுதான், அனல் தெறிக்கும் இதழாக அதை மாற்றி, உரிமைப் போரை வீறு கொண்டு எழச் செய்தார்.
பாரதியின் "இந்தியா' இதழைப் பற்றிக் குறிப்பிடும் திரு.வி.க. "தென்னாட்டைத் தட்டி எழுப்பிய பெருமை அந்தப் பத்திரிகைக்கு உண்டு' என்கிறார்.
"என் அருமைத் தம்பி' என்று பாரதியாரால் அழைக்கப்பட்ட பரலி. சு.நெல்லையப்பரும் சுதந்திரப் போராட்ட வீரர். "லோகோபகாரி'யின் ஆசிரியராகவும் பின்னர் பாரதியின் "சூரியோதயம்' பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் இருந்து உரிமைப் போருக்கு அண்ணனுக்கு (பாரதிக்கு) தோள் கொடுத்தார்.
விடுதலைப் போராட்ட வீரராகவும் இதழாளராகவும் விளங்கிய சுப்பிரமணிய சிவா, ஞானபானு, பிரபஞ்ச மித்திரன், இந்திய தேசாந்திரி ஆகிய இதழ்களை நடத்தியவர். ஞானபானுவின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில்:
"உறங்கிக் கிடக்கும் தமிழ்ச் சாதியாரை, அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணி, அவர்களை முன்னிலையில் கொண்டுவர வேண்டும் என்பதே இப்பத்திரிகையின் நோக்கம்' என்று குறிப்பிடும் சிவா, "சம்ஸ்கிருதம் முதலிய அன்னிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித் தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூ.5 பரிசு வழங்கப்படும்' என்ற அறிவிப்பையும் தந்து, தனித் தமிழ் வளர வித்திட்டார்.
மேலும், ஞானபானு 1916 பிப்ரவரி இதழில், "தமிழ்ப் பண்டிதர்களே! மகாஜனங்களே! ஜாக்கிரதை! ஒரு ஜன சமூகத்திற்கு உயிர் அதன் பாஷைதான். தமிழ் பாஷை அழிந்துவிட்டால் தமிழர்களின் சீரும் சிறப்பும் அழிந்துவிடும். தமிழ் பாஷையில் தேவையான பதங்கள் இல்லையென்று கூறும் பாரதப் புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கற்றுக் கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையென்றால், தமிழ் வாணியின் கிருபை கொண்டு இன்னும் அநேக காரணப் பெயர்களை ஆக்கிக் கொடுங்கள். உங்கள் நா, தமிழே பேசுக; உங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக; உங்கள் இருதயம் தமிழையே நாடுக!' என்றார்.
திரு.வி.க.வின் "தேசபக்தன்' (1917) விடுதலைப் போருக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. "தேசபக்தன் சுதந்திரத்தை விரும்புகிறான்; சுய ஆட்சி கேட்கிறான்' (7.3.1918) என்று திரு.வி.க. தம் இதழின் நோக்கத்தை வெளியிட்டார். தேசபக்தனில் தாம் எழுதிவந்த நிலையைப் பற்றிக் கூறுகையில்: "யான் உருத்திரன் ஆனேன்; என் எழுதுகோல் பாசுபதம் ஆயிற்று' என்கிறார்.
விமோசனம், தந்தி, ஜனசக்தி, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, அறிவு, புது உலகம், சமதர்மம், தாமரை, சுதந்திரச்சங்கு, தேசபந்து, ஆனந்தவிகடன், நவமணி, களிராட்டை, குடிநூல், இராட்டின மகிமை, யங் இந்தியா, விநோதினி, தமிழன் குரல், செங்கோல், தமிழ் முரசு, தமிழ்நாடு, பாரதி முதலியவை சுதந்திரப் போர், மதுவிலக்கு, கதராடைப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்கு விதை தூவின. இந்திய விடுதலைப் போருக்குத் தமிழ்ப் பத்திரிகைகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.

(மே 3 - சர்வதேச பத்திரிகைச் சுதந்திர தினம்)

குறிப்பு:
இந்தக் கட்டுரை தினமணியில் வெளியானவுடன் திரு.கல்கி அவர்களுடைய பத்திரிகை பணி பற்றிய குறிப்புகள் விடுபட்டுள்ளது மிகப்பெரிய குறையாக உள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டி கடிதம் எழுதி இருந்தார்கள். அவர்களிடம் முதலி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விடுபட்டது என்று சொல்வதைவிட எடிட் செய்தபோது பல பத்திகள் குறைக்கப்பட்டன. அதனால்கூட கல்கியின் பணி விடுபட்டிருக்கலாமோ என்பது என் எண்ணம்.. அவரைப் பதிவு செய்த நினைவு இருக்கிறது…. இருந்தாலும் இத்தவறு நேர்ந்ததற்காக கல்கி அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
-இடைமருதூர் கி.மஞ்சுளா
 

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!