சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு

சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு

First Published : 21 August 2014 05:36 PM IST
பஞ்ச (சிவ) மூர்த்திகளுள் ஒருவர் பைரவர். இவரை வைரவர் என்றும் கூறுவர். சிவனின் அம்சமாகத் தோன்றியவர். பைரவர் என்ற சொல்லுக்குக் காவலர் என்று பொருள். இவர் மஹா பைரவர், உக்கிர பைரவர், கால பைரவர், வடுகநாதன், சட்டைநாதர், அஷ்ட பைரவர்கள், யோக பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் முதலிய பல பெயர்களில் அருள் பாலிக்கிறார்.
நாயைத் தன் வாகனமாகக் கொண்டவர். காரணம், இரவில் நடக்கும் பலவற்றை அறியும் திறன் நாய்க்கு உண்டு. மேலும், காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூட்சும புத்தி கொண்டது நாய். குறிப்பாக, காலன் வருவது, கண்ணுக்குத் தெரியாத பல தீய சக்திகள் அலைவது போன்றவற்றைக் கண்டு அவற்றைத் தெரிவிக்கும் ஆற்றலும் நாய்க்கு உண்டு. அதனால் காவல் தெய்வமான பைரவருக்கு நாய் வாகனமாக அமைந்தது.
அசுரர்களை அழிக்க துர்க்கை புறப்பட்டபோது, துர்கைக்குப் படைத்தலைவனாக, அவளுக்கு உதவும் பொருட்டு சிவபெருமானால் (தம் அம்சமாக) அனுப்பப்பட்டவர்தான் பைரவர். இவர் தீய சக்திகளையும், ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும் அழிப்பவர்.
கால பைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் நான்கு வேதங்களாகக் கூறுவர். சிவன் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் தன்னை ஒவ்வொரு ரூபத்தில் வெளிப்படுத்தி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அவ்வாறு அவர் காட்சி தந்த ரூபமே காலபைரவ மூர்த்தி ரூபமாகும். இப்படித் தோன்றிய சிவன் "சண்டாளர்' எனப்படுகிறார். சண்டாளர் என்றால், மக்களின் கொலை பாதக உணர்வுகளை விரட்டக்கூடியவர் என்று பொருள்.
இப்பைரவ மூர்த்தி சிவாலங்களில் காவல் தெய்வமாக நியமிக்கப்பட்டவர். வழிபாடு முடிந்து சிவாலயம் மூடப்பட்டு தாழிட்ட பிறகு, அக்கோயிலின் சாவியை பைரவமூர்த்தி சந்நிதியில் வைப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம். சனீஸ்வரின் குருநாதர் இவர்.
காசியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாராம் சனீஸ்வரன். அவர் காசியில் காவல் தெய்வமான காலபைரவரை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தார். இறுதியில் பைரவர் காட்சி தந்து அவருக்கு மெய்ஞானம் அருளினார் என்கிறது காசி புராணம். சிவாகமங்கள், பைரவக் கோலங்கள் 64 என்கின்றன. இவற்றில் எட்டு வகையான பைரவக் கோலங்கள் மிகவும் சிறப்பானவை. சில சிவாலயங்களில் பைரவரும் சனீஸ்வரனும் அருகருகே காட்சி தருவார்கள். இவர்களை அஷ்டமியிலும்(தேய்பிறை) சனிக்கிழமைகளிலும் அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால், விரோதிகளால் ஏற்படும் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், சனி தோஷம் போன்றவவை நீங்கும் என்று கூறப்படுகிறது.
பைரவக் கோலங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படுபவர் காலபைரவர். இவரை கால புருஷர், பிரம்ம சிரச்சேதர் என்றும் கூறுவர். ஜோதிட நூல்கள் இவரை காலமே உருவமான கடவுள் என்கின்றன. 12 ராசிகளும் இவர் உடம்பின் பகுதிகளாகும்.
பிருஷத் ஜாதகம் என்னும் நூல், உடம்பின் பகுதிகளாக, மேஷம்-தலை, ரிஷபம்-வாய், மிதுனம்-கைகள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டம், விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடை, மகரம்-முழந்தாள், கும்பம்-காலின் கீழ்ப்பகுதி, மீனம் - பாதம் என்று கூறுகிறது.
கால பைரவரின் உடம்பில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலைகளாக இருந்து அலங்கரிக்கின்றன. எனவே, இவரை வழிபட்டால், எல்லா வகையான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
"பூலோகக் கயிலாயம்' என்று அழைக்கப்படும் திருவையாற்றின் கிழக்கே "பைரவன் கோயில்' என்னும் ஊரில் பைரவருக்குத் தனிக் கோயில் ஒன்று உள்ளது.
பைரவரை வணங்கும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்வது சிறப்பு என்கிறது காசி ரகசியம்.
"தளம் பொலி மலரோன் ஆதி
வானவர் தாழ்ந்து போற்ற
உளம் பொலி காசி மேலும்
உயிர்கள் செய் பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டம்
கண்டள பொழிந்து முந்தி
வளம் பொலி வகை செய் கால
பைரவற் கன்பு செய்வாம்''
பைரவத் தலங்களில் சிறப்பு வாய்ந்ததில் சீர்காழியும் ஒன்று. இங்கு எட்டுவிதமான பைரவர்கள் உள்ளனர். அவர்கள் "அஷ்ட பைரவர்கள்' என்று அழைக்கப்படுவர்.
காசியின் காவல் தெய்வம் காலபைரவர் என்பதால், காசி விஸ்வநாதரை வழிபட்ட பின், இவரை வழிபட்டால்தான் காசி யாத்திரையின் பூரண பலன் கிட்டும் என்று சொல்லபட்டிருக்கிறது.
கங்கைக் கரையிலுள்ள 64 படித்துறைகளிலும் 64 பைரவர்கள் இருப்பதாக ஐதீகம். காசியில் இருப்பது போலவே மாயவரத்திற்கு அருகில் உள்ள úக்ஷத்திரபாலபுரம் என்னுமிடத்தில் உள்ள கால பைரவர், காசி கால பைரவருக்குச் சமமாகக் கருதப்படுகிறார். காசி செல்ல முடியாதவர்கள் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
ஆதிசங்கரர் "செüந்தர்ய லஹரியில்' 41-ஆவது ஸ்லோகத்தில் பைரவரைப் பற்றி கீழ்க்காணுமாறு குறிப்பிட்டுள்ளார்:
"காலாக்னி ருத்ரனால் மஹா பிரளயத்தில் பஸ்பமாக்கப்பட்ட உலகத்தை மீண்டும் தோற்றுவிக்க பார்வதி தேவி ஆனந்த பைரவியாகவும், பரமேஸ்வரன் ஆனந்த பைரவராகவும் தாண்டமாடுகின்றனர்.
இதில் சிருங்காரம், வீரம், ஹாஸ்யம், அத்புதம், பீபத்ஸம், ரெüத்ரம், பயனசம், கருணை, சாந்தி என்கிற ஒன்பது வகையான (நவ) ரஸங்களும் வெளிப்படுகின்றன'' என்கிறார்.
லலிதா ஸஹஸ்ரநாமம், "பைரவி' என்று மகேஸ்வரியைக் குறிப்பிடுகிறது. மகேஸ்வரன் துக்கத்தையும் அதற்குக் காரணமான பாவத்தையும் போக்குவதால், ருத்ரன், ருத்ரமூர்த்தி, பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
"ருக்து: கம்து: கஹேதுர்வா
தத்ராவயதிய: பிரபு:
ருத்ர இத்யுச்யதே தஸ்மாத் சிவ:
பரம காரணம்''
பைரவ தந்திரத்தையே சிருஷ்டித்தவர் ஆனந்த பைரவர் எனப் பெயர் பெறும் சிவபெருமான் ஆவார் என்கிறது மேற்குறித்த ஸ்லோகம். சித் சக்தியே ஆனந்த பைரவர். அதன் அதிர்ஷ்டானமே ஆனந்த பைரவர். மஹாகால ஸம்ஹிதை, காளிதந்த்ரம், விஞ்ஞான பைரவர் முதலிய கிரந்தங்களில் இதன் விளக்கம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கந்தபுராணம், மருதவன புராணம், காசி புராணம், பழைய காசி புராணம், காஞ்சி புராணம், திருவாவடுதுறை புராணம், திருச்செந்தூர் புராணம், புலியூர் புராணம், சீர்காழி புராணம், திருவோத்தூர் புராணம், கோயிலூர் புராணம், அவிநாசி புராணம் முதலிய 32 புராணங்களில் பைரவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பைரவ வழிபாடு, நம் வாழ்வில் தொல்லை கொடுக்கும் அனைத்துத் தீய சக்திகளையும் விரட்டி அடித்து நன்மை பயக்கும்.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!