மாறுவேடம்

மாறுவேடம்

First Published : 15 August 2015 07:31 PM IST
வகுப்புக்குள் நுழைந்த வகுப்பாசிரியர்,"" யார் யார் மாறுவேடத்துக்குப் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். மாரியும் வேறு சில மாணவர்களும் பெயர் கொடுத்தனர்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாரியப்பன் மனதுக்குள் "என்ன வேடம் போடலாம்' என்று யோசிக்கத் தொடங்கினான். மாரி சற்று முன் கோபக்காரன், சக மாணவன் நல்ல சட்டை போட்டு வந்தாலோ, புதிய பேனா வைத்திருந்தாலோ மிகவும் பொறாமைப்படுவான். யாரையும் மதிக்க மாட்டான். அதனால் அவனிடம் யாருமே நெருங்கிப் பழக மாட்டார்கள்.
அன்றிரவு குடும்பத்தினர், ஆளாளுக்கு ஒவ்வொரு வேடம் போடக் கூறினார்கள். அப்போது படுக்கையிலிருந்து எழுந்து வந்த பாட்டி, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, இவனை எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ""கண்ணா! இந்த மாறுவேடந்தான் உன்னை நாளைக்கு பலருக்கும் அடையாளப்படுத்தப் போகுது. அதுக்கு முன்னாடி நான் சொல்ற இந்தக் குட்டிக் கதையைக் கேளு. நீதான் முதல் பரிசு வாங்குவ'' என்று கூறி,அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று கதை கூறத் தொடங்கினார்:
""ஓர் ஊரில் வயதான கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு ஞான குரு கிடைக்கவில்லையே என ஏங்கினர். ஒருநாள் "இன்றைக்கு நாம் யாரை முதன் முதலில் பார்க்கிறோமோ அவரையே குருவாக ஏற்றுக்கொள்வோம்' என்று மனைவி கூறியதற்குக் கணவனும் ஒப்புக் கொண்டான்.
இருவரும் கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, காவலர்களிடம் இருந்து தப்பித்து அந்த வழியாக ஓடிவந்த அந்தத் திருடனை வழிமறித்து ""நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்ட வந்த குரு. எங்கள் இருவரையும் நீங்கள்தான் வழிநடத்த வேண்டும்'' என்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டனர்.
÷"இது என்னடா வம்மாப் போச்சு? நாமே காவலர்க்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். இவர்களோ நம்மை குரு என்று பிடித்துக்கொண்டு விட்டனரே' என நினைத்த அந்தத் திருடன், அவர்களைப் பார்த்து, ""நான் ஒரு திருடன்...,என்னை தப்பித்துப் போகவிடுங்கள்'' என்றான்.
ஆனால், அந்த முதியவர்கள் ""நீ திருடனாக இருந்தாலும் பரவாயில்லை, கடவுள் இன்றைக்குத்தான் ஒரு நல்ல குருவை எங்களுக்குக் காட்டியுள்ளார். அதனால் உங்களை விடமாட்டோம். நீங்கள்தான் எங்கள் குரு! இன்றைக்கு நாங்கள் யாரை முதன் முதலில் சந்திக்கிறோமோ அவரையே குருவாக ஏற்றுக்கொள்வதாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டோம்.'' என்றனர்.
திருடனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை! ""சரி, நான்தான் உங்கள் குரு. நான் சொல்வதைக் கேளுங்கள். இந்த இடத்தில் இருவரும் கண்ணை முடி தியானம் செய்யுங்கள். நான் வந்துவிடுகிறேன். நான் வந்து கண்ணைத் திறக்கச் சொல்லும் வரை நீங்கள் கண்திறந்து பார்க்கக்கூடாது, எங்கும் போகக்கூடாது'' என்றான். அவர்களும் அதை தம் குருவின் கட்டளையாக ஏற்று, கடவுளை நினைத்து தியானத்தில் அமர்ந்தனர். இதுதான் தக்க சமயம் என்று நினைத்த அந்தத் திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஆனால் மறுநாளே காவலர்களிடம் மாட்டிக்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
குரு சிறையில் அடைபட்டது தெரியாமல், காட்டில் இருவரும் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் கடவுள் தோன்றி, ""கண்ணைத் திறந்து பாருங்கள். நீங்கள் தியானித்துக் கொண்டிருக்கும் கடவுள் வந்திருக்கிறேன். என்ன வரம் வேண்டும்? கேளுங்கள்!'' என்றார்.
ஆனால், இருவரும் கண்ணைத் திறக்காமலேயே ""எங்கள் குருநாதர் வந்து சொல்லும் வரை நாங்கள் கண்ணைத் திறந்து யாரையும் பார்க்க மாட்டோம்; இது அவர் இட்ட கட்டளை! கடவுளாகவே இருந்தாலும் என்ன செய்வது? குருவின் கட்டளையை மீற முடியுமா?'' என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.
இதைக்கேட்ட கடவுள் திகைத்தார்! அன்றிரவே சிறையில் இருந்த திருடனை விடுவிக்கச் செய்தார்!
சிறையிலிருந்து வெளியே வந்த திருடன் நேராக காட்டுக்குள் ஓடோடிச் சென்று அந்த முதியவர்களின் முன் சென்று ""கண்ணைத் திறவுங்கள்! நான்தான் உங்கள் குரு வந்திருக்கிறேன்!'' என்று கூறினான்.
அப்போதுதான் அவர்கள் கண்ணைத் திறந்து பார்த்து, தங்கள் குருவான அந்தத் திருடனின் காலில் விழுந்து வணங்கினர். "குரு என்று சொன்ன சொல்லுக்கே திருடனான தனக்குக் கடவுளின் அருள் கிடைத்தது! நிஜமாகவே குருவாக வாழ்ந்தால்?'
என்ற எண்ணம் திருடனுக்குத் தோன்றியது. அன்றிருந்து திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு திருந்தினான். அம்முதியவர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் நல்வழி காட்டி மிகப்பெரிய துறவியானார்''என்று கதையை கூறி முடித்த பாட்டி, இப்போது புரிந்ததா? பெயருக்கே இத்தனை மகிமை இருக்கிறதென்றால், நாம் போடும் வேடத்திற்கு எத்தனை மதிப்பு இருக்கும்? அதனால்,ஒரு வேடம் சொல்றேன்....! அந்த வேடத்தையே போடு!'' என்றார்.
பாட்டி சொன்ன கதையைக் கேட்டு சற்று மனத்தெளிவடைந்திருந்த மாரியப்பன், "சரி பாட்டி' என ஒப்புக்கொண்டு, பாட்டி படிக்கச் சொல்லிக் கொடுத்த புத்தகத்தின் இரண்டு மூன்று பத்திகளை அன்றிரவே மனப்பாடம் செய்யத் தொடங்கினான். போடப்போகும் வேடத்துக்கான துணிகளுக்கும் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.

அன்று பள்ளியில் மாறுவேடப் போட்டி. போட்டிக்குத் தயாராகி வந்திருந்த பல மாணவ-மாணவிகளும் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு அவரவர் போட்ட வேடத்துக்குரிய வசனங்களை மனதுக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக மேடை ஏறி, காமராஜர், ஒüவையார், காரைக்கால் அம்மையார், வீர சிவாஜி, கட்டபொம்மன், இராவணன் எனப் பல வேடங்களிட்டு நடித்துக் காட்டிவிட்டு வந்தனர்.
கடைசியாக மிடுக்கோடு மாரியப்பன் மேடை ஏறினான்!, அரங்கில் பலத்த கைத்தட்டல்கள்!! வேடம் அவனுக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது! உடனே மனப்பாடம் செய்து வைத்திருந்த தன் வேடத்துக்குரிய வசனத்தை பேசத் தொடங்கினான்...,
""இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும்தான் நமக்குத் தேவை! வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை நீ உருவாக்கிக் கொள்! முதலில் உலக மக்களின் துன்பங்களைக் குறித்து நீ வருந்து... வெறுப்புணர்ச்சியாலோ, பொறாமையாலோ, உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்கிறா என்று உன்னையே நீ கேட்டுக்கொள். உலகின் மீது வெறுப்புணர்ச்சி, கோபம் ஆகியவை அடுக்கடுக்காகச் சுமத்தப்பட்டு வருகின்றன. அது காரணமாக நல்ல காரியங்கள் தொடர்ந்து பல காலமாக நிறைவேற்றப்படாமல் போயிருக்கின்றன. மாறாகத் தீமையே விளைவிக்கப்பட்டிருக்கின்றன. நீ தூய்மை உள்ளவனாக இருந்தால், வலிமை உள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவன் ஆவாய்!
தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல், தன்னடக்கம் இவை வீரனுக்குரிய பண்புகள்! கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார்! இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை! இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்! மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்!'' என்ற வசனத்தைப் பேசி முடிக்கும்போது மாரியின் கண்களும் கலங்கிவிட்டன.
ஆம்! அவன் போட்டிருந்தது வீரத்துறவி சுவாமி விவேகாந்தரின் வேடம்! அவ்வீரதுறவியின் வார்த்தைகளுக்கு - பொன்மொழிகளுக்கு அத்தகைய வீரியம் இருந்ததை உணர்ந்தான்! அந்த வரிகள் அவனையே கண்கலங்கச் செய்துவிட்டன! அரங்கில் கைத்தட்டல் இப்போது கூடுதலாக ஒலித்துக்கொண்டே இருந்தது!!
எல்லா ஆசிரியர்களும் மேடையில் ஏறி, அவன் தோளைத் தட்டிப் பாராட்டினர்! முதல் பரிசையும் அவனே பெற்றான்! விவேகானந்தரின் பொன்மொழிகளின் வலிமையை - மகிமையை முதன் முதலாக உணர்ந்து கொண்டான். அவன் மனம் இத்தனை காலமும் தான் செய்த தன் செயலுக்காக வருத்தப்படத் தொடங்கியது.
பரிசுடன் வீட்டுக்குள் நுழைந்த மாரி, பாட்டியின் அறையைத் தேடிச் சென்று பாட்டியை அணைத்துக்கொண்டு கூறினான் ""பாட்டி இது உனக்குக் கிடைத்தப் பரிசு பாட்டி. நீதானே இந்த வேடத்தைப் போடச் சொன்னே! இந்தா இதை நீயே வைத்துக்கொள்! இனிமேல் நீங்கள் எல்லாரும் சொல்றபடியே நான் நடந்துக்கிறேன், பள்ளிக்கூடத்திலிருந்தும் இனிமே எந்தப் புகாரும் வராம பார்த்துக்கறேன் பாட்டி'' என்றான்.
பாட்டி கூறினாள், ""இது எனக்குக் கிடைத்ததல்ல; சுவாமி விவேகானந்தருக்குக் கிடைத்த பரிசு! எப்போது நீ செய்த தவறுக்கு வருத்தப்படத் தொடங்கினாயோ அன்றிலிருந்தே நீ புதுப்பிறவி எடுத்து புது மனிதனாகிவிட்டாய்!''

By -இடைமருதூர் கி.மஞ்சுளா

(தினமணி - சிறுவர்மணி) 

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!