படித்தவர்களால் வந்த பிழை!

படித்தவர்களால் வந்த பிழை!

First Published : 21 June 2015 12:38 AM IST
அன்பு நூலான திருவாசகத்துக்குப் பொருள் கூறக்கூடாது என்ற ஒரு மரபு தமிழ் நாட்டில் பன்னெடுங்காலமாக வழங்கி வருகிறது. ஆனால், அந்த மரபையும் மீறி பலர் உரை எழுதியுள்ளனர். தற்போது எண்ணற்ற உரைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன - வந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால், இப்போது வெளிவரும் உரைப் பதிவுகள் பலவும் மூல ஏட்டை அடியொற்றி பதிப்பிக்கப்படுகின்றவா என்பதுதான் சந்தேகம். காரணம், அவற்றில் மலிந்து காணப்படும் சொற்பிழை, பொருட்பிழை, வாக்கியப் பிழை, சந்திப் பிரிப்புப் பிழை போன்றவைகளே!
தமிழறிஞர் மு.அருணாசலம் எழுதிய "திருவாசகம் சில ஆராய்ச்சிக் குறிப்புகள்' என்ற நூல் சைவ சித்தாந்த மகா சமாஜ அறுபதாண்டு நிறைவு மலராக 1965-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதில் மு.அருணாசலம் குறிப்பிடும் தகவல்களிலிருந்து மூல நூலைப் படிக்காமல் படியெடுத்ததைக் கொண்டு மீண்டும் மீண்டும் படியெடுக்கும்போது ஏற்படும் அவலத்தைத் "திருத்தமான பாடம்' என்ற தலைப்பில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது பழமொழி. உருகுவதற்கு எளிதில் பொருளை உணர வேண்டும்; இவ்வாறு உணர்வதற்குப் புத்தகப் பதிப்பு முறை உதவ வேண்டும். மர்ரே கம்பெனியார் பதிப்பின் ஒரே நோக்கம், இலக்கிய - இலக்கண அறிவு பெறாதவர்களும்கூட மூல நூலைப் படித்துப் புரிந்து கொண்டு அதில் ஈடுபட வேண்டும் என்பதே. கம்பெனியார் பதிப்புக்கு பேருதவியாய் இருந்த பள்ளியக்கிரகாரம் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்களுடைய சிறப்பான பதிப்பொன்று அண்ணாமலைச் சர்வகலா சாலையில் சென்ற வருடம் வெளியாயிற்று. இவ்விரு பதிப்புக்களுமே திருத்தமான பாடங்களைக் கொண்டவை.
திருத்தமான பாடம் என்று சொன்ன மாத்திரத்தில், மூல பாடத்தை யாரோ மாற்றிவிட்டார்கள் என்று பலர் அஞ்சுகிறார்கள்; ஏன் பாடத்தைத் திருத்த வேண்டும்? என்று கேட்கிறார்கள். முதல் முதலாகப் பதிப்பித்தவர் ஓர் ஏட்டை அல்லது சில ஏடுகளைப் பார்த்தே பிரதி செய்து அச்சிட்டார். சில ஏடுகளே அவர் பார்த்திருக்கக்கூடும். பார்த்த ஏட்டில் பிழைகள் இருந்திருக்கக்கூடும்; ஏட்டைப் படிப்பதில் பிழை நேரும்; பார்த்து எழுதியதில் பிழை இருக்கும். காலம், சென்ற நூற்றாண்டின் முற்பகுதி என்பதை மறக்கக்கூடாது. அதன்பின் யாரும் ஏட்டைப் பார்த்து அதற்கு இயையத் திருவாசகப் பாடத்தைக் கொண்டதில்லை. நூறு வருஷத்துக்கு மேலாகி (1837-1956), மர்ரே கம்பெனி - கந்தசாமிப் பிள்ளையவர்களின் பதிப்புக்களில் மட்டுமே ஏடுகள் பயன்படுத்தப் பெற்றிருக்கின்றன.
பரிசோதிப்பவர்களின் தகுதிக்கும் கவனத்திற்கும் ஏற்பத் திருத்தனமான சில பாடங்கள் கிடைக்கின்றன. அச்சில் உள்ளதே வேதம் என்பதில்லை. முன்னோர் எழுதி வைத்ததே இந்த நிலைமைக்கு ஆதாரமல்லவா? ஆதலால், பழைமையான ஏடுகளின் ஆதாரம் எந்த நிலையிலும் நமக்கு உதவியாயிருக்கும் என்பது உறுதி. பொருளின் தெளிவுக்கும் சிறப்புக்கும் ஏடுகள் எந்த நிலையிலும் உதவி செய்யும். நான் இங்கு பேசுவது திருவாசகத்தைத் திருத்தும் விஷயமல்ல; திருவாசக ஏடுகளில் காணப்படுகிற செம்மையான பாடத்தை மேற்கொள்வது என்பதே.
இவ்வாறு கூறும் மு.அருணாசலம், சீருடைக்கடலே (பிடித்தபத்து-8), தறிசெறு களிறு (அச்சப்பத்து),தோழம் (திருவெம்பாவை-10), பிறங்கு ஒலி சேர் விண் (திருவெம்பாவை18),
சேடு எறிய (திருத்தோணோக்கம்-3), வல் அரட்டை (சென்னிப்பத்து-8) ஆகிய பாடல்களில் உள்ள சொல்லோ, சொற்றொடரோ, வரிகளோ எங்ஙனம் தவறாகப் படிக்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி விளக்கமாகவும் விரிவாகவும் திருத்தமான பாடத்தை எழுதியிருக்கிறார். அவற்றுள் இரு சொற்றொடரை மட்டும் இங்கு காண்போம்.

தறிசெறு களிறு: அச்சப்பத்து, எட்டாம் பாடல் "தறிசெறி களிரும் அஞ்சேன்' என்று தொடங்குகிறது. ""எந்த பயங்கரமான பிராணிக்கும் அஞ்சமாட்டேன்; இறைவன் கழல்களை ஏத்தும் அறிவு இல்லாதவர்களைக் கண்டால் மட்டுமே அஞ்சுவேன்'' என்று மாணிக்கவாசகர் இங்குப் பாடுகிறார். "தறிசெறி களிறு' என்றால், கட்டுத்தறியில் செறிக்கப்பட்டுள்ள, கட்டப்பட்டுள்ள யானை; கட்டப்பட்டுள்ள யானையைக் கண்டு யாரே அஞ்சுவார்? குழந்தைகூட அஞ்சாது. அருகில் சென்று வேடிக்கை பார்ப்பது இயல்பு. காட்டில் வாழும் யானையைப் பற்றி இங்குப் பேச்சு இல்லை. நாட்டில் காணும் யானை பற்றியதே பேச்சு. யானையை எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். ஆதலால் கட்டிய யானைக்கு அஞ்சமாட்டேன் என்பதில் பொருள் சிறக்கவில்லை.
ஏடுகளில் பாடம் இப்படி இல்லை; "தறிசெறு' என்று உள்ளது. "கட்டுத் தறியை முறித்துக் கொண்டு ஓடுகின்ற' என்பது இதன் பொருள். எனவே, இப்படிப்பட்ட யானைக்குக்கூட, அதாவது மதம் பிடித்த யானைக்குக்கூட நான் அஞ்சேன்' என்று அவர் கூறுகிறார் என்றால், பொருள் சிறப்பாயிருக்கிறது. "செறி' என்ற அச்சுப் புத்தகப் பாடம் "செறு' என்றே பல ஏடுகளில் காணப்படுகிறது. ஏட்டில் காணும் பேதம் ஓர் எழுத்துத்தான். இவ்வாறு ஏட்டையொட்டி நூலை அமைப்பதில் இவ்வளவு பொருட்பொலிவு அமைகிறது.
ஏட்டுப் பாடமே உண்மைப் பாடம் என்று இங்குக் கருதுவதே முறையாகும்.
வல் அரட்டை : குலாப்பத்து, எட்டாம் பாடல்,

""இடக்கும் கருமுருட்டு ஏனப்பின் கானகத்தே
நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால்
கடக்கும் திறல்ஐயர் கண்டகர் "வல்லாட்டை'
அடக்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே''

என்பது பாட்டு. மூன்றாம் அடியில் வருவது "ஐவர் கண்டகர் தம் வல்லாட்டை' என்பது. வல் ஆட்டை - வலிய ஆட்டத்தை என்று பொருளாகும். இது பொருள் பொருந்துமாயினும், "வல்லரட்டை' என்பது இதனினும் சிறப்பாயுள்ளது. வல் அரட்டை - அரட்டு, அரட்டை என்ற இரு சொல் வடிவங்களும் குறும்பு, சேட்டை, கருவம் என்று பொருள் தரும்.
அப்பர் திருவாரூர்த் திருக்குறுந்தொகையில், "அரட்டு' என்ற சொல்லை உபயோகிப்பதன்றி, ஐவர் கண்டகர் என்றமைபோல, அரட்டர் ஐவர் என்ற தொடரையும் கூறுகிறார் (5294).

""முருட்டு மெத்தையில் முன்கிடந் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தஅத் தக்கன்தன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே!''

(அரட்டர் ஐவர் - ஐவர் கண்டகர்; ஐம்புலன்கள். அரட்டு அடக்கி - சிவபெருமான்) இந்த ஒப்புமையைக் கொண்டு நோக்கும்போது, வல் - அரட்டை என்பதே பாடம் என்பது தெளிவாகின்றது.
ஏடுகளில் வல்லரட்டை என்பது "வலலாடடை' என்றே எழுதப்பட்டிருக்கும். மெய் எழுத்துக்களில் புள்ளியிராது "ர' - ஆ, ஒ, ஓ உயிர்மெய்களில் வரும் போது பின்னால் சேர்க்கும் "ô' என்ற அடையாளத்துக்கும் வேறுபாடு தெரியாது. ஆகவே, "வல்லரட்டை' என்று படிக்க வேண்டியதை ஒருவர் "வல்லாட்டை' என்று படித்த மாத்திரத்தில், இதுவே நிலைபெற்றுப் போகிறது. அவ்வாறு நிலைபெற்றதே அச்சுப் புத்தகப் பாடம். அது எழுதினோரால் வந்த பிழையன்று, அச்சிட்டோர் பிழையும் அன்று; படித்தோரால் வந்த பிழை. இதை மறக்கச் செய்வதற்கே இவ்வளவும் சொல்ல வேண்டியிருக்கிறது'' என்று பதிவு செய்துள்ளார் மு.அருணாசலம்.
இதுபோன்ற பிழைகள் தவறாக வாசிப்பவர்களால்தான் ஏற்படுகின்றன. பிழையான நூலைப் பார்த்துப் படியெடுப்பவர்கள் அந்நூலைப் பின்பற்றியே தவறாகப் படித்துப் பதிப்பித்துவிடுகின்றனர். இப்படியே பிழைகள் அடுத்தடுத்த பதிப்புகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஞான நூல்களில் சொற்பிழை, பொருட்பிழை ஏற்படுத்துதல் பாவம். தற்போது வெளிவந்த - வெளிவரும் திருவாசகப் பதிப்புகளில் இப்படிப்பட்ட பிழைகள் மலிந்திருக்கின்றன.
இறை மொழியான தமிழ் மொழியில் ஓர் எழுத்து பிழையானாலும் - தவறானாலும் சொல்லும் பொருளும் மாறிவிடும். தொல்காப்பியர் மரபியலில், "மாறுகொளக் கூறல், குன்றக்கூறல், மிகைப்படக்கூறல், பொருள் இலமொழிதல், மயங்கக்கூறல்' முதலிய பத்து குற்றங்களைக் குறிப்பிடுகிறார் (தொல்.மரபு.நூ.1608). எனவே, பிழையாகப் பதிப்பித்தால் நூல் குற்றம் செய்த பாவத்துக்கு ஆளாவோம்.
-இடைமருதூர் கி.மஞ்சுளா
(ஆனி மகம் 22.6.15 மணிவாசகப் பெருந்தகை குருபூஜை)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!